மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப், லண்டன் செல்வதில் சிக்கல்


மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப், லண்டன் செல்வதில் சிக்கல்
x
தினத்தந்தி 10 Nov 2019 11:30 PM GMT (Updated: 10 Nov 2019 10:34 PM GMT)

மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இஸ்லாமாபாத்,

‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக அவருக்காக ஜாமீன் வழங்கப்பட்டது. கவலைக்கிடமான நிலையில் 2 வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் அவரது உடல்நலம் சற்று தேறியதும், லாகூரின் ஜதி உம்ராவில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தி நவாஸ் ஷெரீப்புக்கு சிகிச்சை அளித்துப் பார்த்துவிட்டதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், நவாஸ் ஷெரீப் வெளிநாடு செல்ல தடை இருப்பதால் அதற்கு அனுமதி கோரி அவரது குடும்பத்தினர் அரசிடம் விண்ணப்பித்தனர்.

அதனை பரிசீலித்த பாகிஸ்தான் அரசு அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது. பிரதமர் இம்ரான்கானின் சிறப்பு உதவியாளர் நயீம் உல் ஹக் கூறுகையில், “பாகிஸ்தானியர் அனைவருக்கும் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உரிமை உள்ளது. அந்த அடிப்படையில் நவாஸ் ஷெரீப்பின் மருத்துவ அறிக்கைகளை பார்வையிட்டு அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நவாஸ் ஷெரீப் தனது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப்புடன் லண்டனுக்கு புறப்பட்டு செல்வார் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்தது. ஆனால் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப்பின் பெயரை நீக்காததால் அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதனால் திட்டமிட்டபடி நேற்று காலை அவர் லண்டன் புறப்படவில்லை. நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரித்து வரும் தேசிய பொறுப்புடைமை விசாரணைக்குழு, அவர் வெளிநாடு செல்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என சான்றிதழ் வழங்காததே தடை பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்காததற்கு காரணம் என கூறப்படுகிறது.

தடை பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கினால் மட்டுமே அவர் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார் என்கிற நிலையில் இம்ரான் கான் அரசு வேண்டுமென்றே அதனை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஒருவர் கூறுகையில், “பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்ட நிலையில் இம்ரான்கானின் அரசு ஒரு தந்திர விளையாட்டை விளையாடி இருக்கிறது” என்றார்.

மேலும் அவர், “பிரதமர் இம்ரான்கானின் உத்தரவாதம் மற்றும் அவரது ஆலோசகர் நயீம் உல் ஹக் மற்றும் வெளியுறவு மந்திரி மெஹ்மூத் குரேஷியின் நேர்மறையான அறிக்கைகள் இருந்தபோதிலும், நவாஸ் ஷெரீப்பின் பெயரை தடைபட்டியலில் இருந்து அகற்ற முடியவில்லை” என கூறினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை இம்ரான்கான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது குறித்து நயீம் உல் ஹக் கூறுகையில், “அரசியல் வேறு, உடல்நிலை சார்ந்த பிரச்சினை வேறு என்பதில் இம்ரான்கான் தெளிவாக இருக்கிறார். அத்துடன் இந்த பிரச்சினைக்கு சட்ட ரீதியில் தீர்வு காண்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் அவர் ஆராய்ந்து வருகிறார்” என்று குறிப்பிட்டார்.


Next Story