கராச்சியில் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாகிஸ்தான் மந்திரி விநோத யோசனை


கராச்சியில் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாகிஸ்தான் மந்திரி விநோத யோசனை
x
தினத்தந்தி 12 Nov 2019 1:54 AM GMT (Updated: 12 Nov 2019 1:54 AM GMT)

பாகிஸ்தானின் கராச்சியில் வெட்டுக்கிளிகள் திரள்களாக திரண்டு காணப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் வெட்டுக்கிளிகள் திரள்களாக பல இடங்களில் காணப்படுகின்றன. பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானின் கடற்கரை பகுதிகளில் இருந்து இவை வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதில் நகரத்தின் பல பகுதிகளில் வானில் வெட்டுக்கிளிகள் பெருந்திரளாக நிறைந்து காணப்படுகின்றன. வீடுகள், சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெட்டுகிளிகள் திரள்களாக காணப்படுவதால் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் குவைத்-இ-அசாம் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஒரு போட்டியின் போது வெட்டுக்கிளி திரள் மைதானத்தை சூழ்ந்ததால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சிந்த் மாகாண அமைச்சர் முகமது இஸ்மாயில் வெட்டுக்கிளிகளின் தொல்லையில் இருந்து மக்கள் தப்பிக்க ஒரு விநோதமான யோசனையை கூறியுள்ளார். 

“பொது மக்கள் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெட்டுக்கிளிகளை பிடித்து சுவையான பிரியாணி முதலிய உணவுகளை தயார் செய்யுங்கள். மக்களுக்கு உணவாக மாறுவதற்காகத் தான் இந்த பூச்சிகள் இங்கே வந்துள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story