ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்க் ஆகியோருடன் பிரதமர் மோடி சந்திப்பு


ரஷ்ய அதிபர் புதின்,  சீன அதிபர் ஜி ஜின்பிங்க்  ஆகியோருடன்  பிரதமர் மோடி சந்திப்பு
x
தினத்தந்தி 14 Nov 2019 2:19 AM GMT (Updated: 14 Nov 2019 2:30 AM GMT)

பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.


பிரேசிலியா,

பிரேசில் நாட்டில்  11-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. பிரிக்ஸ்  நாடுகளின் கூட்டமைப்பில் பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே, புதன்கிழமை பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு பயனுள்ள வகையில் இருந்ததாக பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆர்சிஇபி எனப்படும்  தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா இணைய மறுத்த நிலையில், இரு தலைவர்களுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. 

அதேபோல், ரஷ்ய அதிபர் புதினையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு புதின் அழைப்பு விடுத்தார். 

புதினுடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி தனது வெளியிட்ட டுவிட் பதிவில், “ அதிபர் புதினுடன் சிறப்பான முறையில் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது, இந்தியா - ரஷ்யா உறவுகள் குறித்து ஆலோசித்தோம்.  வர்த்தகம், பாதுகாப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட  துறைகளில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே விரிவான ஒத்துழைப்பு உள்ளது. நெருக்கமான இருதரப்பு உறவுகள் மூலம் இருநாட்டு மக்களும்  பயனடைவார்கள்” என்று தெரிவித்தார். 

Next Story