நிமோனியா: ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் இந்தியாவுக்கு 2-வது இடம் - ஐநா


நிமோனியா: ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் இந்தியாவுக்கு 2-வது இடம் - ஐநா
x
தினத்தந்தி 15 Nov 2019 5:47 AM GMT (Updated: 15 Nov 2019 8:16 AM GMT)

நிமோனியாவால் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது என ஐநா கூறி உள்ளது.

ஐக்கிய நாடுகள்,

உலகளவில் ஒவ்வொரு 39 விநாடிக்கும்  ஒரு குழந்தை  நிமோனியாவால் உயிர் இழக்கிறது.  நிமோனியா, குணப்படுத்தக்கூடிய மற்றும் தடுக்கக்கூடிய  நோயாக இருந்தும்  2018 ஆம் ஆண்டில் நிமோனியாவால்  ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை கூறி உள்ளது.

இது குறித்து  ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) தெரிவித்துள்ளதாவது:-

உலகளவில், நிமோனியாவால்  கடந்த ஆண்டு ஐந்து வயதிற்குட்பட்ட  8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். அதாவது 39 வினாடிக்கு  ஒரு குழந்தை ஆகும். பெரும்பாலான இறப்புகள் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே  ஏற்பட்டு உள்ளன. மேலும் வாழ்க்கையின் முதல் மாதத்திற்குள் கிட்டத்தட்ட 153,000 குழந்தைகள் இறந்து உள்ளனர்.

நிமோனியாவால் குழந்தைகள்  இறப்புகளில் அதிகம் பாதிக்கப்படுவது ஐந்து நாடுகளே ஆகும். நைஜீரியா (162,000), இந்தியா (127,000), பாகிஸ்தான் (58,000), காங்கோ ஜனநாயக குடியரசு (40,000) மற்றும் எத்தியோப்பியா (32,000).

இந்த "மறக்கப்பட்ட தொற்றுநோய்" இப்போது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 15 சதவீத  இறப்புகளுக்கு காரணமாக உள்ளது. ஆயினும், உலகளாவிய தொற்று நோய் ஆராய்ச்சி செலவினங்களில் வெறும் 3 சதவீதம்  மட்டுமே இந்த நோய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நிமோனியாவால் குழந்தைகள் இறப்புகளுக்கும், வறுமைக்கும் இடையிலான வலுவான தொடர்பு மறுக்க முடியாதது. குடிநீருக்கான அணுகல் இல்லாமை, போதிய சுகாதாரப் பாதுகாப்பு இல்லாதது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உட்புற காற்று மாசுபாடு ஆகியவையே  நோய் பாதிப்புக்கு முக்கிய காரணங்களாகும். நிமோனியா தொடர்பான இறப்புகளில் பாதி காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையது.

இந்த மறக்கப்பட்ட தொற்றுநோய் குறித்து எச்சரிக்கை எழுப்பிய யுனிசெஃப் மற்றும் பிற சுகாதார மற்றும் குழந்தைகள் அமைப்புகள் உலகளாவிய நடவடிக்கைக்கான வேண்டுகோளைத் தொடங்கி உள்ளன. இதனை, ஜனவரி மாதம் ஸ்பெயினில்  நடைபெறும் குழந்தை பருவ நிமோனியா குறித்த உலகளாவிய மன்றத்தில் உலகத் தலைவர்களிடம் எடுத்துரைக்கும் என கூறப்பட்டு உள்ளது.

யுனிசெஃப்  நிர்வாக இயக்குநர் ஹென்றிட்டா போர் கூறியதாவது:-

ஒவ்வொரு நாளும் ஐந்து வயதிற்குட்பட்ட 2,200 குழந்தைகள் நிமோனியாவால் இறக்கின்றனர். இது குணப்படுத்தக்கூடிய மற்றும் பெரும்பாலும் தடுக்கக்கூடிய நோயாகும். இந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு வலுவான உலகளாவிய அர்ப்பணிப்பு மற்றும் அதிகரித்த முதலீடுகள் முக்கியமானவை. குழந்தைகள் இருக்கும் இடத்தில்  வழங்கப்படும் செலவு, குறைந்த பாதுகாப்பு, தடுப்பு மற்றும் சிகிச்சைமுறைகள் மூலம் மட்டுமே லட்சக்கணக்கான உயிர்களை நாம் உண்மையிலேயே காப்பாற்ற முடியும் என கூறினார்.

இந்த அறிக்கையை தாக்கல் செய்யும் போது, டெல்லியில் உள்ள காற்றின் தரக் குறியீடு (AQI) கடுமையான பிரிவில் 324 ஆக இருந்தது. இந்த நிலையில், சுவாசிப்பது கடினம். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதான குடிமக்கள் வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். 

கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள், பெரும்பாலும் மாசுபாடு, மோசமான சுகாதாரம் மற்றும் பாக்டீரியா தொற்றுநோய்களால் ஏற்படுகின்றன.  இது 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் கிட்டத்தட்ட 70 சதவீத  தொற்றுநோய்களுக்கு முதன்மையான காரணமாக இருந்தன. நிமோனியா மிகப்பெரிய  கொலைகார தொற்றுநோயாகும் என்று தேசிய சுகாதார விவரம் (என்.எச்.பி) தெரிவித்துள்ளது. 

தேசிய சுகாதார விவரம் 2018 அறிக்கையின் படி  நிமோனியாவால் இந்தியா முழுவதும் 41,996,260 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளால் 3,740 இறப்புகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. 2017 ஆம் ஆண்டில் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள், தொற்றுநோய்களின் மொத்த நிகழ்வுகளில் 69 சதவீதமாக  இருந்தன. மேலும் இதுபோன்ற இறப்புகளில் 23 சதவீதம்  காரணமாக இருந்தன. இதுபோன்ற தொற்றுநோய்களால் 40,810,524 பேர் பாதிக்கப்பட்டு, 3,164 இறப்புகள் நிகழ்ந்து உள்ளன.

Next Story