வளர்ச்சிப் பாதையில் இணைய வேண்டும்: “தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்” - தொழில் முனைவோர் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


வளர்ச்சிப் பாதையில் இணைய வேண்டும்: “தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்” - தொழில் முனைவோர் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 15 Nov 2019 11:18 PM GMT (Updated: 15 Nov 2019 11:18 PM GMT)

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அனைவரும் இணைய வேண்டும் என்றும் தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் எனவும் வாஷிங்டன் தொழில் முனைவோர் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

வாஷிங்டன்,

அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாஷிங்டனில் அமெரிக்க-இந்திய எஸ்.எம்.இ. (சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்) கவுன்சில் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகள் பெறுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்க-இந்திய எஸ்.எம்.இ. கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி எலிசா புலிவர்த்தி, நிர்வாகிகள் ஸ்காட் ஜான்சன், டேவிட் அம்டன், ராஜன் நடராஜன், அந்தோணி நாதன், முரளிபதி, ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி., நிதித்துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

அமெரிக்கர்களுக்கும், அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் குறிப்பாக தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுக்கவே இங்கே நான் வந்திருக்கிறேன்.

எப்.டி.ஐ. பைனான்சியல் டைம்ஸ் குரூப் இதழ் ஆய்வின்படி, 2018-வது ஆண்டில் உற்பத்தி துறையில் தமிழ்நாடு அதிக அளவில் அன்னிய முதலீடுகளை பெற்றுள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற வசதிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இந்தியாவில் 2-வது இடத்தில் இருப்பதாகவும், முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும் ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் முதலீடுகளுக்கான சூழ்நிலை எப்படியிருக்கிறது என்பது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலமும், ஈர்க்கப்பட்ட 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப் புள்ள முதலீடுகள் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்பூங்கா, தகவல் தொழில் நுட்ப பூங்கா மற்றும் மருத்துவ பூங்காக்களில் ஏறக்குறைய 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தொழில் தொடங்குவதற்கு வழங்க தயார் நிலையில் உள்ளன. இந்த பூங்காக்களில் எல்லாம் 20 சதவீத நிலங்கள் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல், திறன்மிகுந்த மனித வளம், தரமான மின்சார வினியோகம், ஆறு விமான நிலையம், நான்கு துறைமுகங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவாக இருக்கிறது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்க தாமதமின்றி அனுமதி வழங்க தமிழக அரசு தனியாக ஒற்றைசாளர முறை அறிமுகப்படுத்தி தனியாக ஒரு இணைய தளம் உருவாக்கியிருக்கிறது.

ஆகவே சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தொழில் வளர்ச்சியின் புதிய பொற்காலம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தொழில் புரிவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய எங்கள் மாநிலம் தயாராக இருக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் நீங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு புனரமைக்கப்பட்டு இருந்த திருமண மண்டப கல்வெட்டை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.


Next Story