உலக செய்திகள்

போராட்டத்துக்கு பின் முதல்முறையாக ஹாங்காங்கில் சீனப்படை வீரர்கள் குவிப்பு + "||" + China deploys PLA troops in Hong Kong for 1st time since pro democracy protests began

போராட்டத்துக்கு பின் முதல்முறையாக ஹாங்காங்கில் சீனப்படை வீரர்கள் குவிப்பு

போராட்டத்துக்கு பின் முதல்முறையாக ஹாங்காங்கில் சீனப்படை வீரர்கள் குவிப்பு
ஹாங்காங்கில் போராட்டம் தொடங்கிய பின் முதன்முறையாக சீனா அங்கு தனது படைகளை குவித்துள்ளது.
பெய்ஜிங்,

ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

ஹாங்காங்கையே உலுக்கிய இந்த போராட்டம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜனநாயக ஆர்வலர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு சர்ச்சைக்குரிய மசோதாவை திரும்பப்பெற்றது. ஆனாலும் போராட்டம் ஓயவில்லை.

சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள், ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் சிக்குபவர்கள் மீது வெளிப்படையான விசாரணை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.

தொடர்ந்து 6 மாதங்களாக நடந்து வரும் போராட்டத்தால் ஹாங்காங்கில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இந்த போராட்டம் தொடங்கியது முதலே பலமுறை வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதற்கிடையே கடந்த வாரம் போராட்டத்தின் போது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஓடியபோது கட்டிடத்தின் மேல் இருந்து விழுந்ததில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 6 மாத கால போராட்டத்தில் பலியான முதல் நபர் இவர் என்பதால் அவரது சாவு போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது.

நகரின் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்கள் சாலை முழுவதும் செங்கற்களை அடுக்கி, மூங்கிலால் ஆன தடுப்புகளை சாலையின் குறுக்கே போட்டு போக்குவரத்தை முடக்கியுள்ளனர். மேலும் ஹாங்காங்கின் மத்திய பகுதியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தை நெருங்கி வரும் போலீசாரை மாணவர்கள் வில் அம்புகள் மூலம் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கின்றனர். ஹாங்காங்கில் பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால் அடுத்த வாரம் வரை பள்ளிகள், கல்லூரிகளை மூட ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே ஹாங்காங்கில் நீடிக்கும் வன்முறைக்கு சீன அதிபர் ஜின்பிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், உலகின் மிக பெரிய ராணுவம் என கூறப்படும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் ஹாங்காங்கில் குவிக்கப்பட்டு உள்ளது.  சாலை தடுப்புகளை நீக்க உதவும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அவர்கள் பச்சை நிற டி சர்ட்டுகள் மற்றும் கருப்பு நிற டிரவுசர்கள் அணிந்தபடி கைகளில் சிவப்பு வண்ண வாளிகளை சுமந்து கொண்டு 4 மணியளவில் இருந்து தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி ராணுவ வீரர் ஒருவர் கூறும்பொழுது, வன்முறையை நிறுத்துவது மற்றும் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவது எங்களுடைய பொறுப்பு.  இதனால் நாங்கள் இந்த பணியை தொடங்கி உள்ளோம் என கூறினார்.  அவர்களுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.