சிகிச்சை பெறுவதற்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அனுமதி - பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு


சிகிச்சை பெறுவதற்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அனுமதி - பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Nov 2019 10:30 PM GMT (Updated: 16 Nov 2019 10:30 PM GMT)

சிகிச்சை பெறுவதற்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அனுமதி அளித்து பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

லாகூர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தனது வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெற லண்டன் செல்வது நல்லது என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் நவாஸ் ஷெரீப் பெயர் உள்ளதால் அவர் லண்டனுக்கு செல்வதில் சிக்கல் எழுந்தது. இந்த பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கி, லண்டனுக்கு சென்று வர ரூ.700 கோடிக்கான உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்பட சில நிபந்தனைகளை நவாஸ் ஷெரீப்புக்கு இம்ரான்கான் அரசு விதித்தது.

ஆனால் இந்த நிபந்தனையை ஏற்க மறுத்த நவாஸ் ஷெரீப், இது தொடர்பாக லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று இதனை விசாரித்தது.

அப்போது வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து எந்த வித நிபந்தனைகளும் இன்றி நவாஸ் ஷெரீப் பெயரை நீக்க பாகிஸ்தான் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்ல 4 வாரங்கள் அனுமதி வழங்கும்படியும் இம்ரான்கான் அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டது.

லண்டனில் நவாஸ் ஷெரீப்புக்கு சிகிச்சை அளிக்க உள்ள டாக்டர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்து இந்த கால அளவு மேலும் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


Next Story