இலங்கை அதிபர் தேர்தலில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு - தமிழர்களை வாக்களிக்க விடாமல் ராணுவம் தடுத்ததாக புகார் + "||" + Mysterious persons fired in Sri Lankan presidential election - Complains that the military has prevented Tamils from voting
இலங்கை அதிபர் தேர்தலில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு - தமிழர்களை வாக்களிக்க விடாமல் ராணுவம் தடுத்ததாக புகார்
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிக்க வந்த பொதுமக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழர்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் ராணுவம் தடுப்பு வேலிகளை அமைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
கொழும்பு,
இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு போன்றவற்றால் நாடு நிலைகுலைந்திருக்கும் நிலையில், அங்கு நடைபெறும் தற்போதைய தேர்தல் உலக அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.
இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். எனினும் இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் மொத்தமுள்ள 1.59 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக நாடு முழுவதும் 12,845 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இலங்கை வரலாற்றில் அதிக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட தேர்தலாக இந்த தேர்தல் கருதப்படுகிறது.
இதைப்போல 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால், அவர்களின் பெயர்களுடன் 26 அங்குலத்தில் நீண்ட வாக்குச்சீட்டு தயாரிக்கப்பட்டதும் இதுவே முதல் முறையாகும். தேர்தல் பணிகளில் 4 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்பு பணிகளுக்கு 60 ஆயிரம் போலீசார் களத்தில் இறங்கினர். மேலும் 8 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரும் பயன்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது.
இந்த தேர்தலில் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக வடமேற்கு பகுதியில் ஒட்டு போடுவதற்காக சென்ற வாக்காளர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர்.
மன்னாரின் வடகிழக்கு பகுதியில் ஓட்டு போடுவதற்காக வடமேற்கு புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் வாக்காளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வரிசையாக சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் சாலைகளில் தடுப்பு வேலிகள் வைத்து வாகனங்களை மடக்கிய மர்ம நபர்கள், பின்னர் அந்த வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் கற்களையும் வீசிவிட்டு தப்பினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து பெரு நகரங்களிலும் கூடுதலாக ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே வடக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ராணுவ வீரர்கள் சாலைகளில் தடுப்பு வேலிகளை வைத்து அடைத்ததாக கூறப்படுகிறது. தமிழர்கள் ஓட்டுப்போடுவதை தடுக்கும் வகையில் ராணுவம் இந்த செயலில் இறங்கியுள்ளதாக தமிழர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இந்த குற்றச்சாட்டை ராணுவம் மறுத்து உள்ளது.
இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுடன் நடந்த வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பின்னர் வாக்குச்சீட்டுகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் கொண்டு செல்லப்பட்டு, 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்த தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். களத்தில் உள்ள மொத்த வேட்பாளர்களில் முதல் 3 தேர்வுகளை வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சீட்டில் குறிப்பிடுவார்கள். இதன் மூலம், யாரும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை பெறாவிட்டால், முதல் 2 இடங்களை பிடிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு, சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் வாக்குகள் கிடைத்தன. இலங்கையின் புதிய அதிபராக அவர் இன்று பதவி ஏற்கிறார்.