மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் நாளை லண்டன் செல்கிறார்


மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் நாளை லண்டன் செல்கிறார்
x
தினத்தந்தி 17 Nov 2019 10:47 PM GMT (Updated: 17 Nov 2019 10:47 PM GMT)

மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் நாளை லண்டன் செல்ல உள்ளார்.

இஸ்லாமாபாத்,

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும் லண்டன் சென்று சிகிச்சை பெற்றால் மட்டுமே அவரது உடல்நிலை தேறும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து அவரது பெயரை பாகிஸ்தான் அரசு நீக்காததால் அவர் லண்டன் செல்வதில் சிக்கல் எழுந்தது. அவர் லண்டன் செல்லவேண்டுமானால் ரூ.700 கோடிக்கான உறுதி மொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை இம்ரான்கான் அரசு விதித்தது.

அதனை ஏற்க மறுத்த நவாஸ் ஷெரீப் இது தொடர்பாக லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எந்தவித நிபந்தனையும் இன்றி நவாஸ் ஷெரீப்பின் பெயரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நீக்க அரசுக்கு உத்தரவிட்டனர். இதன் மூலம் அவர் லண்டன் செல்வதில் நீடித்த சிக்கல் நீங்கியது.

இந்த நிலையில், நவாஸ் ஷெரீப், சிகிச்சைக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) லண்டன் புறப்பட்டு செல்வார் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “அனைத்து வகையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை கொண்ட விமான ஆம்புலன்சில் நவாஸ் ஷெரீப், நாளை லண்டன் செல்கிறார்” என கூறினார்.

மேலும் அவர், “சிறிது காலம் லண்டனில் தங்கி சிகிச்சை பெறும் நவாஸ் ஷெரீப், அதன் பின்னர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வாய்ப்பு உள்ளது” என்றார்.


Next Story