இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - இன்று பதவி ஏற்கிறார்


இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி - இன்று பதவி ஏற்கிறார்
x
தினத்தந்தி 17 Nov 2019 11:30 PM GMT (Updated: 18 Nov 2019 12:14 AM GMT)

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு, சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் வாக்குகள் கிடைத்தன. இலங்கையின் புதிய அதிபராக அவர் இன்று பதவி ஏற்கிறார்.

கொழும்பு,

இலங்கை அதிபராக இருக்கும் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், அங்கு புதிய அதிபரை தேர்ந் தெடுக்க நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் மாதம், தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததால், பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. இருப்பினும், அதையும் மீறி துப்பாக்கி சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடந்தன.

மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளரும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவியது.

கோத்தபய ராஜபக்சே, இலங்கை பாதுகாப்பு செயலாளராக இருந்தவர். இலங்கை போரில் தமிழர்கள் பலர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. ஓட்டுப்பெட்டிகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையில், தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாசா அதிக ஓட்டுகள் பெற்றார். முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் முத்தூர் பகுதியிலும் அவருக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன.

ஆனால், சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் மாகாணங்களில் கோத்தபய ராஜபக்சேவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன. இதனால், கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்தார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில், அவர் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

கோத்தபய ராஜபக்சே 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 ஓட்டுகளும் (52.25 சதவீதம்), சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 ஓட்டுகளும் (41.99 சதவீதம்) பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதர வேட்பாளர்கள் 5.76 சதவீத ஓட்டுகள் பெற்றனர்.

அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். மேலும், ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தங்களது ஆதரவு, எனது அரசியல் வாழ்க்கையின் வலிமைக்கு அடித்தளமாக அமையும். கோத்தபய ராஜபக்சேவுக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 70 வயதான கோத்தபய ராஜபக்சே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தொண்டர்களுக்கு அறிவுரை கூறி உள்ளார்.

அதில், “நாம் புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறோம். இலங்கை மக்கள் அனைவரும் இந்த பயணத்தில் ஒரு அங்கமாக உள்ளனர். நாம் பிரசாரத்தில் கடைப்பிடித்த அதே கண்ணியம் மற்றும் ஒழுக்கத்துடன் அமைதியாக வெற்றியை கொண்டாட வேண்டும்” என்று அவர் கூறி உள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே அனுராதபுரத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் விழாவில் இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்கிறார். அவருக்கு அந்த நாட்டின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, அவர் பதவி விலக மறுத்தால், அவரை நீக்க முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி மாதத்துக்கு முன்பு, நாடாளுமன்றத்தை கலைக்க முடியாத நிலையும் உள்ளது.

ரணில் விக்ரமசிங்கே பதவி விலகினால், புதிய பிரதமராக தனது சகோதரர் ராஜபக்சேவை நியமிக்க கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ராஜபக்சே சகோதரர்கள், சீனாவுக்கு ஆதரவானவர்கள். அவர்கள் பதவிக்கு வருவதால், இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது கடற்படை நடமாட்டத்தை அதிகரிக்கக்கூடும். அது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அதிபர் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். நமது இரு நாடுகள் இடையே நெருக்கமான உறவை வலுப்படுத்துவதற்கு இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். நமது பிராந்தியத்தில் அமைதி, வளம், பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்தவும் இணைந்து செயல்பட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மோடி தனது வாழ்த்துச் செய்தியில், இந்தியாவுக்கு வருமாறு கோத்தபய ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.

வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நமது இரு நாடுகளும் வரலாறு மற்றும் பொதுவான நம்பிக்கைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த நட்புறவை வலுப்படுத்த ஆர்வமாக இருக்கிறேன். வெகு விரைவில் தங்களை சந்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story