3 மாதங்களுக்கு பின் இந்தியாவுடன் அஞ்சல் சேவையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியது


3 மாதங்களுக்கு பின் இந்தியாவுடன் அஞ்சல் சேவையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 19 Nov 2019 10:55 AM GMT (Updated: 19 Nov 2019 7:44 PM GMT)

3 மாதங்களுக்கு பின் இந்தியாவுடன் பாகிஸ்தான் மீண்டும் அஞ்சல் சேவையை தொடங்கியது.

இஸ்லாமாபாத்,

பயங்கரவாதிகளின் எளிய தாக்குதல் இலக்காக காஷ்மீர் மாநிலம் இருந்து வந்தது. அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல் சாசன பிரிவு 370-ஐ மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து தனது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது.

கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கைகள், பாகிஸ்தானுக்கு பெருத்த அதிர்ச்சியை அளித்தது. அந்த நாடு, வலுவான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது.

அந்த வகையில், இந்தியாவுடனான தூதரக ரீதியிலான உறவுகளை குறைத்துக்கொண்டது. எல்லா தகவல் தொடர்பையும், வர்த்தக தொடர்புகளையும் நிறுத்தியது.

ஆகஸ்டு மாதம் 27-ந் தேதிக்கு பின்னர் இந்திய அஞ்சல் எதையும் பாகிஸ்தான் ஏற்கவில்லை.

இது பற்றி கடந்த அக்டோபர் மாதம் தகவல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் குறிப்பிடுகையில், “பாகிஸ்தான் எந்தவித முன் அறிவிப்பும் செய்யாமல் ஒரு தலைபட்சமாக அஞ்சல் சேவையை நிறுத்தி விட்டது. இது உலக அஞ்சல் கூட்டமைப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது” என கூறினார்.

இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பின்னர் இப்போது இந்தியாவுடன் அஞ்சல் சேவையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.

இருப்பினும் இந்தியாவுடனான அஞ்சல் பார்சல் சேவையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கவில்லை.


Next Story