கனடாவில் மந்திரி ஆன தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த்


கனடாவில் மந்திரி ஆன தமிழ்ப்பெண் அனிதா ஆனந்த்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:15 PM GMT (Updated: 21 Nov 2019 7:47 PM GMT)

கனடாவில் 338 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடந்தது.



கனடாவில் 338 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஸ்கீர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது.

இந்திய நாடாளுமன்றத்தில் மொத்தம் 13 சீக்கிய எம்.பி.க்கள்தான் இருக்கிறார்கள்.

ஆனால் கனடா நாடாளுமன்றத்தில் 18 சீக்கிய எம்.பி.க்கள் அலங்கரிக்கிறார்கள்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் ட்ரூடோ தனது புதிய மந்திரிசபையை நேற்று முன்தினம் அமைத்தார்.

இந்த மந்திரிசபையில் முதல் முறை எம்.பி.யாகி உள்ள தமிழ்நாட்டின் வேலூர் பகுதியை சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண் இடம் பெற்றுள்ளார். இவர் அங்குள்ள ஆன்டாரியா மாகாணத்தில், ஓக்வில்லே தொகுதியில் இருந்து கனடா நாடாளுமன்றத்துக்கு லிபரல் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை மந்திரி ஆகி இருக்கிறார்.

கனடாவில் ஒரு இந்துப்பெண் எம்.பி. மந்திரி ஆகி இருப்பது இதுவே முதல் முறை.

இவரது தந்தை டாக்டர் சுந்தரம் விவேகானந்த் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் ஆவார். தாயார் டாக்டர் சரோஜ், மயக்க மருத்துவ நிபுணர் ஆவார்.

கனடாவில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் கென்ட்வில்லே நகரில் 1967-ம் ஆண்டு பிறந்த அனிதா ஆனந்த், முதுநிலை சட்டப்படிப்பு படித்து அங்குள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியையாக பணியாற்றியவர் ஆவார். ஜான் என்ற கணவரும், 4 குழந்தைகளும் உள்ளனர்.

அனிதா ஆனந்த் மந்திரி ஆகி இருப்பது உலகமெங்கும் வாழும் தமிழ்ப்பெண்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இந்து நாகரிகத்தின் கனடா அருங்காட்சியகத்தின் தலைவர் பதவியையும் அனிதா ஆனந்த் வகித்துள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள 7 புதிய மந்திரிகளில் அனிதா ஆனந்த் ஒருவர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் 3 பேருக்கு ஜஸ்டின் ட்ரூடோ மந்திரி பதவி அளித்துள்ளார். அவர்கள் 3 பேரும் சீக்கியர்கள் ஆவார்கள். மேலும் அவர்கள் முந்தைய மந்திரிசபையிலும் இடம் பெற்றிருந்தவர்கள்.

அவர்களில், ஹர்ஜித் சிங் சாஜனுக்கு (வயது 49) ராணுவ மந்திரி பதவி தரப்பட்டுள்ளது. இவர் முந்தைய மந்திரிசபையிலும் ராணுவ மந்திரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நவ்தீப் பெயின்ஸ் (42), கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பத்துறை மந்திரி ஆகி இருக்கிறார்.

பர்தீஷ் சாக்கர்(39), பன்முகம், உள்ளடக்கம், இளைஞர் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய மந்திரிசபை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில், “புதிய மந்திரிசபை வலுவான, திறமையான அணி ஆகும். நிறைய பணிகள் காத்திருக்கின்றன. கனடாவை முன்னோக்கி அழைத்துச்செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என குறிப்பிட்டிருக்கிறார்.

Next Story