மைக்ரோசாப்ட்டுக்கு ஒப்பந்தம் வழங்கிய விவகாரம்: அமெரிக்க ராணுவம் மீது அமேசான் வழக்கு


மைக்ரோசாப்ட்டுக்கு ஒப்பந்தம் வழங்கிய விவகாரம்: அமெரிக்க ராணுவம் மீது அமேசான் வழக்கு
x
தினத்தந்தி 24 Nov 2019 10:44 PM GMT (Updated: 24 Nov 2019 10:44 PM GMT)

மைக்ரோசாப்ட்டுக்கு ஒப்பந்தம் வழங்கிய விவகாரம் தொடர்பாக, அமெரிக்க ராணுவம் மீது அமேசான் வழக்கு தொடர்ந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகனை டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 10 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.71 ஆயிரம் கோடி) ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெற அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு நிறுவனங்களான மைக்ரோசாப்ட்டும், அமேசானும் விண்ணப்பித்தன.இந்த ஒப்பந்தம் அமேசானுக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென மைக்ரோசாப்ட்டுக்கு பென்டகன் ஒப்பந்தத்தை வழங்கியது. இது அமேசான் நிறுவனத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒப்பந்தத்தை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக பென்டகன் மீது அமேசான் குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பென்டகன் மீது வாஷிங்டன் கோர்ட்டில் அமேசான் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டுரூ ஹெர்டனர் கூறுகையில், “மதிப்பீட்டு செயல்முறையின் பல அம்சங்களில் குறைபாடுகள், பிழைகள் மற்றும் தெளிவற்ற சார்பு ஆகியவை உள்ளன. இந்த விஷயங்களை ஆராய்ந்து சரிசெய்ய வேண்டியது அவசியம்” என்றார்.

இதற்கிடையே அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஒப்பந்த ஒதுக்கீடு நடந்துள்ளதாகவும், நீதிதுறையுடன் சேர்ந்து, இந்த வழக்கை ஆய்வு செய்வோம் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.


Next Story