ஹாங்காங் உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம் வெற்றி


ஹாங்காங் உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம் வெற்றி
x
தினத்தந்தி 26 Nov 2019 12:15 AM GMT (Updated: 25 Nov 2019 10:35 PM GMT)

ஹாங்காங்கில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம் அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

ஹாங்காங், 

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகள் கோரி கடந்த 6 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்களால் ஹாங்காங்கில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் போராட்டத்துக்கு மத்தியில் ஹாங்காங்கில் நேற்று முன்தினம் உள்ளாட்சி (மாவட்ட கவுன்சில்) தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. 18 மாவட்டங்களில் உள்ள 452 மாவட்ட கவுன்சில் இடங்களுக்கு 1,090 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பஸ் வழித்தடங்கள் மற்றும் குப்பை சேகரிப்பு போன்ற உள்ளூர் பிரச்சினைகளை கண்காணித்து தீர்வு காணும் அதிகாரம் மட்டுமே மாவட்ட கவுன்சிலர்களுக்கு இருப்பதால் இந்த தேர்தல் பொதுவாக பெரிய அளவில் ஆர்வத்தை உருவாக்குவதில்லை.

ஆனால், கடந்த 6 மாதங்களாக ஹாங்காங்கில் நிலவிவரும் அமைதியின்மை மற்றும் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை அரசு கையாண்ட விதத்துக்கு மக்கள் சான்றிதழ் அளிக்கும் வாய்ப்பாகவே இந்த தேர்தல் பார்க்கப்பட்டது.

இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் இந்த தேர்தலில் அதிகம் ஆர்வம் காட்டினர். இதன் விளைவாக வரலாறு காணாத வகையில் 71 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் ஒட்டுமொத்தமாக 47 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.

வாக்குப்பதிவு முடிந்ததுமே உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் யாரும் எதிர்பாராத வகையில் அரசுக்கு எதிராக போராடி வரும் ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றினர்.

இதன் மூலம் மொத்தம் உள்ள 18 மாவட்டங்களில் 17 மாவட்டங்களின் கவுன்சில்கள் ஜனநாயக ஆதரவு கவன்சிலர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் நிர்வாக தலைவர் கேரி லாமுக்கான கடும் கண்டனமாகவும், போராட்டத்துக்கான ஆதரவாகவும் பார்க்கப்படுகிறது.

சீன அரசு ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பலரும் இந்த தேர்தலில் தோல்வியடைந்திருப்பதால், இது அந்த நாட்டு அரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எனினும் தேர்தல் முடிவுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக கேரி லாம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில் “ஹாங்காங்கின் தற்போதைய நிலைமை மற்றும் சமூகத்தில் உள்ள ஆழ்ந்த பிரச்சினைகள் குறித்த மக்கள் அதிருப்தியை இந்த தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கிறது. பொது உறுப்பினர்களின் கருத்துகளை அரசு தாழ்மையுடன் கேட்டு, அதற்கேற்ப செயல்படும்” என கூறினார்.

ஹாங்காங் மக்களில் பெரும்பாலானோர் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றனர் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தி இருப்பதாக ஜனநாயக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தேர்தல் முடிவு குறித்து சீனாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் வரவில்லை.

எனினும் இதுபற்றி பேசிய வெளியுறவு மந்திரி வாங் யி, “என்ன நடந்தாலும், ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதி. ஹாங்காங்கில் குழப்பம் ஏற்படுத்தும் அல்லது அதன் செழிப்பையும், ஸ்திரத்தன்மையையும் சேதப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் வெற்றி பெறாது” என கூறினார்.


Next Story