சுபாஷ் கபூர் விற்பனை செய்த தமிழ்நாட்டின் பழமையான கோவில் சிலைகள் - இந்தியா வரும் ஆஸ்திரேலிய பிரதமர் ஒப்படைக்கிறார்


சுபாஷ் கபூர் விற்பனை செய்த தமிழ்நாட்டின் பழமையான கோவில் சிலைகள் - இந்தியா வரும் ஆஸ்திரேலிய பிரதமர் ஒப்படைக்கிறார்
x
தினத்தந்தி 27 Nov 2019 11:30 PM GMT (Updated: 27 Nov 2019 10:49 PM GMT)

சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் விற்பனை செய்த தமிழ்நாட்டின் பழமையான கோவில் சிலைகளை இந்தியா வரும் ஆஸ்திரேலிய பிரதமர் திரும்ப ஒப்படைக்கிறார்.

மெல்போர்ன்,

இந்தியாவின் பழமையான கோவில் சிலைகள், கலைப்பொருட்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. என்ன விலை கொடுத்து வேண்டுமானாலும் அவற்றை வாங்குவதற்கு வெளிநாடுகளில் தயாராக இருக்கிறார்கள்.

இந்தியாவை சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம், மேன்ஹாட்டன் நகரில் இப்படிப்பட்ட சிலைகள், கலைப்பொருட்களை விற்பனை செய்யும் கலைக்கூடம் ஒன்றை நடத்தி வந்தார்.

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து பழமையான கோவில் சிலைகள், கலைப்பொருட்கள் கொள்ளையடித்து கொண்டு செல்லப்பட்டு, சுபாஷ் கபூரின் கலைக்கூடத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து கோவில் சிலைகள், கலைப்பொருட்கள் கொள்ளை வழக்கில் சுபாஷ் கபூர் சிக்கினார். அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தமிழகத்திலும், அமெரிக்காவிலும் குற்ற வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சுபாஷ் கபூரின் கலைக்கூடத்தில் இருந்து வாங்கிய சில முக்கிய சிலைகள், ஆஸ்திரேலியாவின் தேசிய கலைக்கூடத்தில் பாதுகாப்பாக உள்ளன.

இந்த சிலைகள் இந்தியாவில் இருந்து கொள்ளையடித்து, சட்டத்துக்கு புறம்பான வழியில் கொண்டு சென்று, சுபாஷ் கபூரின் கலைக்கூடத்தில் அவரால் விற்பனை செய்யப்பட்டவை என்பது ஆஸ்திரேலிய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவற்றை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்தது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் தனது இந்திய சுற்றுப்பயணத்தின்போது ஆஸ்திரேலியாவில் உள்ள அந்த முக்கிய சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறார்.

இதையொட்டி நேற்று அவர் மெல்போர்னில் விடுத்த அறிக்கையில், “நியூயார்க்கை சேர்ந்த இந்திய கலைப்பொருள் வியாபாரியிடம் இருந்து வாங்கப்பட்ட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் (சிலைகள்) இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும், “இந்தியாவைப் போன்று பண்டைய கலாசாரம் மற்றும் கலைப்பொருட் களின் மதிப்பை நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம். இந்த கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பது சரியானது. இது இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான ஆழமான உறவின் நிரூபண ஆகும்” எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ள சிலைகளில், தமிழ்நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 15-ம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் சிலைகளும் (துவாரபாலகர் சிலை) அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 6-ம் நூற்றாண்டு மற்றும் 8-ம் நூற்றாண்டை சேர்ந்த நாகராஜா சிலைகளும் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட துவாரபாலகர் சிலைகள், நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள அத்தாள நல்லூரில் உள்ள மூன்றீஸ்வரமுடையார் கோவில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டவை என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, “நான் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவில் ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற பிறகு கோர்ட்டு அனுமதி பெற்று இந்த வழக்கு விசாரணையை நடத்தினேன். அதில், சஞ்சீவ அசோகன் என்ற சிலை கடத்தல்காரன் இந்த சிலைகளை கொள்ளையடித்து, மும்பை கொண்டு சென்று, அங்கு வல்லவ பிரகாஷ் என்ற சிலை கடத்தல்காரரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவர் இந்த சிலைகளை அமெரிக்காவுக்கு கடத்திச்சென்று, சுபாஷ் கபூரிடம் விற்பனை செய்துள்ளார். இந்த சிலைகளை ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் உள்ள கலைக்கூடத்துக்கு ரூ.4.98 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். எங்கள் விசாரணையில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.


Next Story