சீனா, பாகிஸ்தான் கடற்படை அரபிக் கடலில் கூட்டு கடற்பயிற்சி மேற்கொள்ள திட்டம்


சீனா, பாகிஸ்தான் கடற்படை அரபிக் கடலில் கூட்டு கடற்பயிற்சி மேற்கொள்ள திட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2019 11:51 AM GMT (Updated: 28 Nov 2019 11:51 AM GMT)

சீனா மற்றும் பாகிஸ்தான் கடற்படை அடுத்த ஆண்டு அரபிக்கடலில் கூட்டு கடற்பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.

பெய்ஜிங்,

சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஆண்டுதோறும் ஆயுத பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில், சீனா மற்றும் பாகிஸ்தான்  கடற்படையினர் இணைந்து அடுத்த ஆண்டு அரபிக் கடலில் கூட்டு கடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

இதுபற்றி சீன ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி ரென் குவாகியாங் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, பாகிஸ்தான் மற்றும் சீன ஆயுத படைகளின் வருடாந்திர பரிமாற்ற திட்டத்தின் அடிப்படையில், 2020ம் ஆண்டு பாகிஸ்தானில் இரு நாடுகளும் கூட்டு கடற்படை பயிற்சியை மேற்கொள்ளும் என கூறினார்.

இந்த பயிற்சிக்காக, சிறிய ராணுவ கப்பல்கள், போர்க்கப்பல்கள், 5 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி மீட்பு கப்பல்கள் ஆகியவற்றை சீனா அனுப்பி வைக்கிறது.

இந்த கூட்டு பயிற்சியானது, இரு நாடுகளின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினை வலுப்படுத்தவும், அனைத்து பருவநிலைக்கான போர் திறன்சார்ந்த கூட்டாண்மை மற்றும் வருங்கால பகிர்வுக்கான கடல் சமூக கட்டமைப்பிற்கான முயற்சிகளை மேம்படுத்தவும் உதவும் என அவர் கூறியுள்ளார்.

இந்த பயிற்சியானது எந்த சூழ்நிலையோடும் தொடர்புடையதோ அல்லது எந்த நாட்டையும் இலக்காக கொள்ளவோ இல்லை என அவர் கூறினார்.  எனினும், இரு நாடுகள் மேற்கொள்ளும் கடற்படை பயிற்சிக்கான காலஅட்டவணையை அவர் வெளியிடவில்லை.

Next Story