சுரினாம் நாட்டின் அதிபருக்கு 20 ஆண்டு சிறை; ராணுவ கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


சுரினாம் நாட்டின் அதிபருக்கு 20 ஆண்டு சிறை; ராணுவ கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Nov 2019 11:30 PM GMT (Updated: 30 Nov 2019 6:11 PM GMT)

அரசியல் எதிரிகளை தூக்கில் போட்ட சுரினாம் நாட்டின் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ராணுவ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

பரமரிபோ, 

தென் அமெரிக்க நாடான சுரினாம் நாட்டில் அதிபராக இருந்து வருபவர், டேசி பூட்டர்ஸ் (வயது 74). இவர் 1980-களில் சர்வாதிகாரியாக இருந்தபோது 15 அரசியல் எதிரிகளை தூக்கில் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது டிசம்பர் படுகொலைகள் என அழைக்கப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மீது அந்த நாட்டின் ராணுவ கோர்ட்டில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சிந்தியா வால்ஸ்டீன் மாண்டர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில் டேசி பூட்டர்ஸ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருதினர்.

இதையடுத்து அதிபர் டேசி பூட்டர்சுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தனர். தற்போது இவர் அரசு முறை சுற்றுப்பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார். தனக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனாலும் அவர் நாடு திரும்பிய உடன் தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வக்கீல் இர்வின் கன்ஹாய் அறிவித்துள்ளார்.

சுரினாம் நாட்டின் சட்டப்படி அனைத்து விதமான மேல்முறையீடுகளையும் செய்து முடிக்கிற வரையில் தண்டிக்கப்பட்ட ஒருவரை கைது செய்யமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story