பிரான்சில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி 3 பேர் சாவு


பிரான்சில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி 3 பேர் சாவு
x
தினத்தந்தி 2 Dec 2019 10:06 PM GMT (Updated: 2 Dec 2019 10:06 PM GMT)

பிரான்சில் மீட்பு பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வார் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஏரி, ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 பேர் பலியாகினர். மேலும் பலர் மாயமாகி இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவவீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லு-லூக்-எட்-லி-கேனட் நகரில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக மீட்பு குழுவை சேர்ந்த 3 பேர் ஒரு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.


Next Story