வடகொரியாவில் கனவு நகரத்தை திறந்து வைத்தார் கிம் ஜாங் அன்


வடகொரியாவில் கனவு நகரத்தை திறந்து வைத்தார் கிம் ஜாங் அன்
x
தினத்தந்தி 3 Dec 2019 10:05 PM GMT (Updated: 3 Dec 2019 10:05 PM GMT)

வடகொரியாவில் தனது கனவு நகரத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அன் திறந்து வைத்தார்.

பியாங்யாங்,

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தனது கனவு திட்டங்களில் ஒன்றான நவீன நகரத்தை திறந்துவைத்தார். கிம் ஜாங் அன் குடும்பத்தினரின் பூர்வீகமாக கருதப்படும் பேக்டு மலைக்கு அருகே, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் சொகுசு வசதிகளுடன் அமைந்துள்ள இந்த நகரத்துக்கு ‘சம்ஜியோன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் 4 ஆயிரம் குடும்பங்கள் வசிக்க முடியும்.

அந்த நாட்டின் அரசு நாளிதழ் வெளியிட்ட செய்தியில், கிம் ஜாங் அன் ரிப்பன் வெட்டி சம்ஜியோன் நகரத்தை திறந்து வைக்கும் காட்சி மற்றும் மக்களின் கொண்டாட்டங்கள் நிறைந்த பல புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகள், கலாசார மையம் மற்றும் உயர்தர மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த நகரம் நவீன நாகரிகத்தின் வடிவமாக திகழும் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் காரணமாக கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் எதிர்பார்த்ததைவிட தாமதமாகவே இந்த நகரம் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கட்டாய தொழிலாளர்கள் மூலமே இந்த நகரம் கட்டி முடிக்கப்பட்டதாகவும், தொழிலாளர்கள் அனைவரும் கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.


Next Story