டிரம்ப் மீது இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தாக்கு “அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முன்னுதாரணம் ஆகிவிட்டார்”


டிரம்ப் மீது இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தாக்கு “அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முன்னுதாரணம் ஆகிவிட்டார்”
x
தினத்தந்தி 5 Dec 2019 8:00 PM GMT (Updated: 5 Dec 2019 7:24 PM GMT)

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் கடுமையாக தாக்கி உள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது அரசியல் எதிரியான ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது உக்ரைனில் விசாரணை நடத்த அந்த நாட்டுக்கு அழுத்தம் கொடுத்ததாக எழுந்துள்ள புகாரால் அவருக்கு நெருக்கடி முற்றி வருகிறது.

இது தொடர்பாக டிரம்ப் மீது பதவி நீக்க விசாரணை நடத்தி வரும் அமெரிக்க நாடாளுமன்ற புலனாய்வு குழு நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் 300 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் ஜோ பிடெனுக்கு எதிராக விசாரணை நடத்த டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் டிரம்ப் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முன்னுதாரணம் ஆகியிருக்கிறார் என்றும் இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் கடுமையாக தாக்கி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

டிரம்ப் போன்றோரை நாம் கண்டிக்காவிட்டால், அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை சுய அரசியல் லாபத்துக்காக பின்னுக்கு தள்ளுவதை நாம் அனுமதித்தால் அது நம் ஜனநாயகத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.

நாம் மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்துக்குள் சென்று கொண்டிருக்கிறோம். ஒரு ஜனாதிபதி தன் அலுவலகத்தை தனது சொந்த அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துவதை உரிமை மீறல் பிரச்சினையாக நாம் பார்க்காவிட்டால், நாம் ஜனநாயக நாட்டில் வாழ்வதாக அர்த்தமில்லை, சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்வதாகி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story