அமெரிக்காவில் கடற்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்


அமெரிக்காவில் கடற்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 5 Dec 2019 9:30 PM GMT (Updated: 5 Dec 2019 7:41 PM GMT)

அமெரிக்காவின் கடற்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கடற்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்.

கடற்படை தளம்

அமெரிக்காவின் ஹவாய் மாகாணம் ஹொனலுலு நகரில் ‘பியர்ல் ஹார்பர்’ என்ற வரலாற்று சிறப்பு மிக்க கடற்படை தளம் உள்ளது. இதன் மற்றொரு பகுதியில் விமானப்படை தளமும் அமைந்துள்ளது.

கடந்த 1941-ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி இந்த பியர்ல் ஹார்பர் கடற்படை தளத்தின் மீது ஜப்பான் குண்டு வீசியது. இதில் 2,300-க்கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுவே ஜப்பான் மீது அமெரிக்கா போர் தொடுக்க காரணம் ஆனது.

78-வது ஆண்டு தினம்

இந்தநிலையில் பியர்ல் ஹார்பர் மீது ஜப்பான் குண்டு வீசியதின் 78-வது ஆண்டு நினைவு தினம் நாளை (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குண்டு வீச்சில் உயிர் இழந்த அமெரிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதில் ஜப்பானின் தாக்குதலில் உயிர் தப்பிய முன்னாள் ராணுவவீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பியர்ல் ஹார்பர் கடற்படை தளத்தில் முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன.

திடீர் துப்பாக்கிச்சூடு

இந்தநிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு பியர்ல் ஹார்பருக்கு வந்த அமெரிக்க கடற்படையை சேர்ந்த மாலுமி ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதில் பொது பாதுகாப்புத்துறையின் ஊழியர்கள் 3 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய அந்த மாலுமி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிகிச்சை பலனளிக்காமல்...

இதையடுத்து உடனடியாக கடற்படை தளம் மூடப்பட்டு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். தாக்குதல் தொடர்பாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பின்னணி தொடர்பாகவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்திய விமானப்படை தளபதி

இந்தநிலையில் பியர்ல் ஹார்பர் கடற்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது இந்திய விமானப்படை தளபதி மார்ஷல் ராக்கேஷ் குமார் பதாரியா மற்றும் அவரது குழுவினர் அங்கு இருந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பியர்ல் ஹார்பரில் நடக்கும் பசிபிக் விமானப்படை தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க பதாரியா, தன் குழுவினருடன் அங்கு சென்றுள்ளார். அப்போதுதான் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

எனினும் இந்த தாக்குதலில் பதாரியா மற்றும் அவரது குழுவினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Next Story