ரஷிய நாட்டில் ஊருக்குள் பனிக்கரடிகள் புகுந்ததால் பரபரப்பு


ரஷிய நாட்டில் ஊருக்குள் பனிக்கரடிகள் புகுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Dec 2019 10:46 PM GMT (Updated: 6 Dec 2019 10:46 PM GMT)

ரஷிய நாட்டில் ஊருக்குள் பனிக்கரடிகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாஸ்கோ,

ரஷிய நாட்டின் சுகோட்கா பிராந்தியத்தில் கேப் ஸ்மிட் என்ற இடத்தில் ஏராளமாக பனிக்கரடிகள் வசித்து வருகின்றன. இங்கு தற்போது வெப்ப நிலை நிலவுவதால் பனி உறைந்து போக காத்திருக்கிறபோது, பனிக்கரடிகள் பக்கத்தில் உள்ள ரிர்காபிய் கிராமத்துக்கு உணவு தேடி அவ்வப்போது வந்து விடுகின்றன. இப்போது ஒரே நேரத்தில் 56 பனிக்கரடிகள் அந்த கிராமத்துக்குள் புகுந்திருப்பதாக கணக்கிட்டுள்ளனர்.

இந்த பனிக்கரடிகள் தாக்கும் அச்சம் இருப்பதால் பொதுமக்களிடையே பதற்றம் நிலவுகிறது. அங்கு நடக்கவிருந்த பொதுநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கிராமத்துக்கு அடிக்கடி பனிக்கரடி வருவதால் அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்ற வேண்டும் என்று வல்லுனர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பருவ நிலை பனிக்கரடிகளுக்கு சாதகமாக இருக்கிறபோது, குறிப்பாக உறைபனி நிலவுகிறபோது அவை கடல் முயல்களை வேட்டையாட சென்று விடுமாம். ஆனால் உலக வெப்பமயமாதல் காரணமாக சுகோட்கா பிராந்தியத்தில் நல்ல வெப்பம் நிலவுவதுதான் பனிக்கரடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது; உணவு தேடி ஊருக்குள் வர வைக்கிறது.

Next Story