அமெரிக்காவில் பயங்கரம்: கடற்படை பயிற்சி நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி


அமெரிக்காவில் பயங்கரம்: கடற்படை பயிற்சி நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி
x
தினத்தந்தி 7 Dec 2019 11:30 PM GMT (Updated: 7 Dec 2019 10:25 PM GMT)

அமெரிக்காவில் கடற்படை பயிற்சி நிலையத்தில் சவுதி அரேபிய பயிற்சி மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். அவர் போலீஸ் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் புளோரிடா மாகாணம், பென்சாகோலா என்ற இடத்தில் கடற்படை பயிற்சி நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 16 ஆயிரம் ராணுவ வீரர்களும், 7,400 சிவிலியன்களும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இங்கு சவுதி அரேபிய ராணுவ அதிகாரியான முகமது அல் ஷாம்ரானி என்பவர் பயிற்சி மாணவராக இருந்து வந்தார். இவர் 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், அங்கு விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்தார். பயிற்சி காலம், மொத்தம் 3 ஆண்டுகள் ஆகும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் பயிற்சி வகுப்பில் இருக்கும் போது தனது கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடத்தொடங்கினார். அதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்தவாறு ஓட்டம் பிடிக்கத்தொடங்கினார்கள்.

இருப்பினும் குண்டு பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் அங்கு விரைந்த போலீஸ் படையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய முகமது அல் ஷாம்ரானியை சுட்டுக்கொன்றனர்.

படுகாயம் அடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

முகமது அல் ஷாம்ரானி நடத்தியது பயங்கரவாத தாக்குதலா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுதான் இந்தக் கேள்வியை கேட்க வைத்துள்ளது.

அந்த பதிவில் அவர், “நான் தீமைக்கு எதிரானவன். ஒட்டுமொத்த அமெரிக்காவும் தீய தேசமாக மாறி உள்ளது. நீங்கள் அமெரிக்கர்களாக இருப்பதால் மட்டுமே நான் உங்களுக்கு எதிரானவன் இல்லை. உங்கள் சுதந்திரங்களுக்காக நான் உங்களை வெறுக்கவும் இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை ஆதரிக்கிறீர்கள். குற்றங்களை செய்கிறீர்கள். அதற்கு நிதியும் அளிக்கிறீர்கள்” என கூறி உள்ளார்.

அவரது டுவிட்டர் பக்கத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டு விட்ட அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் கூறிய வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன. இப்போது அந்த டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க கடற்படை நிலையத்தில் சவுதி அரேபிய பயிற்சி மாணவர் நடத்திய தாக்குதல், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் சவுதி அரேபிய மன்னர் சல்மான், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சவுதி அரேபிய பயிற்சி மாணவர் நடத்திய தாக்குதல் கொடூரமானது என கண்டனம் தெரிவித்தார்.

சவுதி அரேபிய மன்னர் சல்மான் தன்னுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியதையும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதையும் டுவிட்டர் பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ. விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

Next Story