மெக்சிகோவில் அதிபர் மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி


மெக்சிகோவில் அதிபர் மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி
x
தினத்தந்தி 8 Dec 2019 9:58 PM GMT (Updated: 8 Dec 2019 9:58 PM GMT)

மெக்சிகோவில் அதிபர் மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் பலியாயினர்.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் அதிபர் மாளிகை உள்ளது. இங்குதான் அந்த நாட்டின் அதிபர் லோபஸ் ஒப்ரடோர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிபர் மாளிகைக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபர் சிறுநீர் கழிப்பதற்கு இடம் தேடி அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்தார். தங்கள் குடியிருப்புக்கு சம்பந்தம் இல்லாத நபர் ஒருவர் உள்ளே வந்திருப்பதை பார்த்து, குடியிருப்பு வாசிகள் அவரிடம் சென்று விசாரித்தனர்.

அப்போது அவர் திடீரென துப்பாக்கியை எடுத்து தன்னை கேள்வி கேட்ட குடியிருப்புவாசிகளை சுட்டு தள்ளினார். இதில் 3 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர்.

துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் அதிபர் மாளிகைக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதிபர் மாளிகைக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பெரும் பரபரப்பு உருவானது. உடனடியாக நூற்றுக் கணக்கான போலீசார் குவிக் கப்பட்டு பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டது. எனினும் துப்பாக்கிச்சூடு நடந்தபோது அதிபர் லோபஸ் ஒப்ரடோர் மாளிகையில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story