ஒரே நாளில் பிரபலமாக வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்; 100 அடி உயரத்தில் இருந்து சிறுவனை வீசினான்


ஒரே நாளில் பிரபலமாக வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்; 100 அடி உயரத்தில் இருந்து சிறுவனை வீசினான்
x
தினத்தந்தி 9 Dec 2019 7:14 AM GMT (Updated: 9 Dec 2019 7:14 AM GMT)

ஒரே நாளில் ஊடகங்களில் பிரபலமாக 18 வயது வாலிபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒரு சிறுவன் உயிருக்கு போராடி வருகிறான்.

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவர் ஜான்டி பிரேவரி. இவனுக்கு தற்போது 18 வயது. இவன் கடந்த ஆகஸ்ட் மாதம் டேட் மாடர்ன் அருங்காட்சியகத்துக்கு சென்றான். அப்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் தனது 6 வயது மகனுடன் வந்திருந்தார்.

அப்போது அந்த சிறுவனை நீண்ட நேரமாக பார்த்து கொண்டிருந்த ஜான்டி பிரேவரி, அந்த தாய் அசந்த நேரம் பார்த்து விருட்டென்று அச்சிறுவனை தூக்கி கொண்டு ஓடியுள்ளான். இதை கண்டு அதிர்ந்த அப்பெண் மற்றும் அருகில் இருந்தோர் அவனை துரத்தி கொண்டு ஓடியுள்ளனர்.

ஆனால் யார் கையிலும் சிக்காத ஜான்டி பிரேவரி நேராக 10-வது மாடிக்கு சென்று அச்சிறுவனை தூக்கி வீசியுள்ளான். வீசப்பட்ட அந்த சிறுவன் 5வது மாடியின் மேற்கூரை மீது விழுந்து படுகாயமடைந்தான்.

இந்த எதிர்பாராத சம்பவத்தால் முதுகு, கைகால்களில் எலும்பு முறிவுகள் மற்றும் மூளையில் இரத்தப்போக்கு உள்ளிட்ட பல காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் அந்த சிறுவன். இரண்டு பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில் சிறுவனால் தற்போது வரை அசையவோ, பேசவோ முடியவில்லை. அடிக்கடி ஆபத்தான நிலைக்கு சென்று விடுவதாக குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஜான்டி பிரேவரியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிறுவனை, ஏன் அவன் தூக்கி எறிந்தான் என்பதற்கான காரணத்தை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜான்டி பிரேவரி அளித்த வாக்குமூலத்தில்,  எனக்கு எந்த மனநலப் பிரச்சினையும் இல்லை. "ஒவ்வொரு முட்டாள்களுக்கும்  என்னை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன்". மேலும் என்னை பற்றி டிவி மற்றும் பத்திரிகைகளில் செய்தி வந்து நான் ஒரே நாளில் பிரபலமாக வேண்டும் என்றும் விரும்பினேன். அதற்காக தான் இந்த செயலை செய்ததாக கூறினான் . 

மேலும் விசாரணையின் போதும் நீதிமன்றத்தில் எவ்வித தயக்கமும் இன்றி சிரித்து கொண்டே தனது குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளான்.

இதனை அடுத்து அவனை குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, அவனுக்கான தண்டனை வரும் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். குற்றத்தை செய்தபோது ஜான்டி பிரேவரிக்கு வயது 17 தான்.

கடந்த வாரம் தான் அவனுக்கு 18 வயது பூர்த்தியானது. இதனை அடுத்தே இந்த குற்ற சம்பவத்தை செய்தது ஜான்டி பிரேவரி என்று வெளியுலகிற்கு அடையாளம் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story