உலக செய்திகள்

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு + "||" + in UK parliamentary election

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
லண்டன், 

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் வெளியேற இங்கிலாந்து அரசு முடிவு செய்திருந்தது. இந்த நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என்று அழைக்கப்படுகிறது.

ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களே தெரசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை தோல்வி அடைந்தது.

போரிஸ் ஜான்சன்

இதனால் தெரசா மே கடந்த ஜூன் மாதம் 7-ந் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமராக பதவி ஏற்றார். அவர், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு இங்கிலாந்து எம்.பி.க்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றால் ஒப்பந்தம் இன்றியே ‘பிரெக்ஸிட்’ நிகழும் என திட்டவட்டமாக கூறினார்.

ஆனால் ஒப்பந்தம் இன்றி வெளியேறும்பட்சத்தில், பொருளாதார ரீதியாக இங்கிலாந்து பெரும் சரிவினை சந்திக்கும் என்பதால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

4 கோடியே 60 லட்சம் பேர்

இதற்கிடையே ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தொடர்பாக போரிஸ் ஜான்சன் அரசு தாக்கல் செய்த முதல் மசோதாவை இங்கிலாந்து எம்.பி.க்கள் தோற்கடித்தனர். அதனை தொடர்ந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 650 உறுப்பினர்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இங்கிலாந்தை பொறுத்தவரையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அந்த வகையில் தற்போது 4 கோடியே 60 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வளர்ப்பு நாயுடன் வந்தார்

நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த சுமார் 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினர்.

தலைநகர் லண்டனின் மத்திய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வளர்ப்பு நாயுடன் வந்து ஓட்டுபோட்டார்.

அதேபோல் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன், தாராளவாத ஜனநாயக கட்சி தலைவர் ஜோ சுவின்சன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினர்.

இன்று முடிவுகள் வெளியாகும்

வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குள் எண்ணப்படும் என்றும், இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலில் பல முக்கிய கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

வெற்றி வாய்ப்பு பிரகாசம்

‘பிரெக்ஸிட்’ விவகாரம் இந்த தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் நீண்ட இழுபறியில் இருக்கும் ‘பிரெக்ஸிட்’ விவகாரத்துக்கு ஒரு தீர்வை கொண்டுவரும் என நம்பப்படுகிறது.

326 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...