பிறந்தநாளை கொண்டாட சென்ற மருத்துவ மாணவி, எரிமலை வெடிப்பில் பலியான பரிதாபம்


பிறந்தநாளை கொண்டாட சென்ற மருத்துவ மாணவி, எரிமலை வெடிப்பில் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 15 Dec 2019 10:22 PM GMT (Updated: 15 Dec 2019 10:22 PM GMT)

பிறந்தநாளை கொண்டாட நியூசிலாந்து சென்ற மருத்துவ மாணவி, எரிமலை வெடிப்பில் பரிதாபமாக பலியானார்.

வெலிங்டன்,

நியூசிலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஒயிட் தீவில் உள்ள எரிமலையில் கடந்த திங்கட்கிழமை வெடிப்பு ஏற்பட்டது. இதில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, இங்கிலாந்து மற்றும் மலேசியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கிக்கொண்டனர்.

உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் எரிமலை வெடிப்பில் சிக்கி 9 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். 8 பேர் மாயமாகினர். அவர்களில் 6 பேர் நேற்று முன்தினம் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் விவரங்களை நியூசிலாந்து அரசு வெளியிட்டு உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்தோடு ஒயிட் தீவுக்கு சுற்றுலா சென்றபோது எரிமலை வெடிப்பில் சிக்கி அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

அவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த கிரிஸ்டல் ஈவ் புரோவிட் (வயது 21) ஆவார். அங்குள்ள மருத்துவ கல்லூரியில் கால்நடை மருத்துவம் படித்து வந்தார். இவர் தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தனது தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் நியூசிலாந்தின் ஒயிட் தீவுக்கு சுற்றுலா சென்றார்.

அப்போது ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் சிக்கி கிரிஸ்டல் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தந்தை மற்றும் சகோதரிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரது தாய் எந்தவித காயங்கள் இன்றி உயிர் தப்பினார். கிரிஸ்டலின் இறப்பு அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story