ஜப்பானில் பரபரப்பு: நடுவானில் விமானத்தில் தீ; அவசரமாக தரையிறங்கியது


ஜப்பானில் பரபரப்பு: நடுவானில் விமானத்தில் தீ; அவசரமாக தரையிறங்கியது
x
தினத்தந்தி 19 Dec 2019 11:15 PM GMT (Updated: 19 Dec 2019 7:29 PM GMT)

ஜப்பானில் நடுவானில் விமானத்தில் தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறங்கியது. இதில் 278 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

டோக்கியோ, 

ஜப்பானின் வடக்கு பகுதியில் புகுயோகா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ‘ஆல் நிப்பான் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 767’ ரக விமானம் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 278 பயணிகள் இருந்தனர். புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்துக்கு பிறகு நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பயணிகள் மத்தியில் பெரும், பதற்றமும் பீதியும் உருவானது. அவர்கள் பயத்தில் அலறினர்.

இதையடுத்து, விமானத்தை மீண்டும் புகுயோகா விமான நிலையத்துக்கு திருப்பி அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார். இது குறித்து அவர் விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, அங்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் அவசரகால வழிகள் வழியாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம் தனிமைப்படுத்தப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு என்ஜினில் எரிந்த தீ அணைக்கப்பட்டது.

விமானி சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை அவசரமாக தரையிறக்கியதால் பயணிகள் அனைவரும் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

Next Story