இந்தோனேசியாவில் கோர விபத்து: ஆற்றுக்குள் பஸ் விழுந்து 25 பேர் பலி


இந்தோனேசியாவில் கோர விபத்து: ஆற்றுக்குள் பஸ் விழுந்து 25 பேர் பலி
x
தினத்தந்தி 24 Dec 2019 7:22 AM GMT (Updated: 24 Dec 2019 9:41 PM GMT)

இந்தோனேசியாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 பேர் பலியாகினர்.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் தெற்கு பகுதியில் சுமத்ரா மாகாணத்தில் உள்ள பெங்குலு நகரில் இருந்து, பலேம்பங் நகருக்கு நேற்று முன்தினம் காலை பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் டிரைவரை தவிர்த்து 37 பயணிகள் இருந்தனர்.

உள்ளூர் நேரப்படி இரவு 11.15 மணிக்கு இந்த பஸ் லிகு லெமடங் என்ற நகரில் உள்ள மலைபாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் சாலையோரம் உள்ள 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து, பின்னர் ஆற்றுக்குள் விழுந்தது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த கோர விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Next Story