பொம்மை போல் நின்ற புலி திடீரென சிறுவன் மீது பாய்ந்தது...


பொம்மை போல் நின்ற புலி திடீரென சிறுவன் மீது பாய்ந்தது...
x
தினத்தந்தி 25 Dec 2019 1:43 PM GMT (Updated: 25 Dec 2019 3:44 PM GMT)

விலங்கியல் பூங்கா ஒன்றில் சிறுவன் காணும்பொழுது பொம்மை போல நின்ற புலி அவன் திரும்பியதும் திடீரென பாய்ந்தது.

டப்ளின்,

அயர்லாந்து நாட்டில் உள்ள டப்ளின் நகரில் டப்ளின் விலங்கியல் பூங்கா உள்ளது.  நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட வன விலங்குகளும், ஊர்வன மற்றும் பறப்பன ஆகியவையும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 22ந்தேதி தனது பெற்றோருடன் சிறுவன் ஒருவன் இந்த பூங்காவிற்கு சுற்றுலாவாக சென்றுள்ளான்.  அங்கு விலங்குகளை ரசித்து கொண்டு ஓரத்தில் நின்றிருந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  அவனுக்கு பின்னால் புலி ஒன்று சற்று தொலைவில் நின்றிருந்தது.  ஆனால் சிறுவன் அதனை கவனிக்கவில்லை.  மெதுவாக சிறுவனை நோக்கி புலி முன்னேறியது.

திடீரென அந்த சிறுவன் திரும்பி பார்க்கிறான்.  இதனை கவனித்த புலி ஒரு பொம்மை போன்று அந்த இடத்திலேயே நின்று விடுகிறது.  சிறுவன் திரும்பும் வரை காத்திருந்த புலி, சிறுவன் திரும்பியதும் வேகமெடுத்து ஓடி வந்து பின்புறமிருந்து சிறுவனை நோக்கி பாய்ந்தது.

ஆனால், உடைக்க முடியாத வகையிலான வலிமையான கண்ணாடிக்கு இந்த பக்கம் சிறுவன் நின்றிருந்துள்ளான்.  இதனால் அவன் உயிர் தப்பினாலும் திடீரென புலி பாய்ந்தது சிறுவனுக்கு சற்று அதிர்ச்சி ஏற்படுத்தியது.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது.


Next Story