செல்போனால் விபரீதம்: 100 அடி மலையில் இருந்து விழுந்த பெண்


செல்போனால் விபரீதம்: 100 அடி மலையில் இருந்து விழுந்த பெண்
x
தினத்தந்தி 30 Dec 2019 10:02 PM GMT (Updated: 30 Dec 2019 10:02 PM GMT)

செல்போனை பார்த்தபடியே சென்றதால், 100 அடி மலையில் இருந்து பெண் ஒருவர் கீழே விழுந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாலோஸ் வெர்டெஸ் என்ற இடத்தில் கடற்கரையொட்டி சிறிய அளவிலான மலைகள் நிறைந்த பகுதி உள்ளது. இங்குள்ள 100 அடி உயரம் கொண்ட ஒரு மலையில் 32 வயதான பெண் ஒருவர் ஏறினார்.

மலையின் உச்சியை அடைந்த பெண் அங்கு தனது செல்போனை பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தார். அப்போது உள்ளூர் நேரப்படி இரவு 7 மணியளவில் சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த பெண் மலையில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் மலை அடிவாரத்தில் இருந்த பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார்.

இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் ஆள்நடமாட்டமே இல்லை. இதனால் இரவு முழுவதும் அந்த பெண் பாறைகளுக்கு இடையே சிக்கி தவித்தார். மறுநாள் காலை உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு அந்த வழியாக வந்த மலையேற்ற வீரர் ஒருவர் மலை அடிவாரத்தில் பெண் சிக்கியிருப்பதை பார்த்து, மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் ஹெலிகாப்டரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர், நீண்ட நேரம் போராடி பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story