அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி


அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி
x
தினத்தந்தி 30 Dec 2019 10:13 PM GMT (Updated: 30 Dec 2019 10:13 PM GMT)

அமெரிக்காவில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர்.

நியூயார்க்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரின் புறநகர் பகுதியில் தேவாலயம் ஒன்று உள்ளது.

இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் காலை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதனால் தேவாலயத்துக்குள் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.

அனைவரும் பயத்தில் அலறினர். பலர் தேவாலயத்தில் உள்ள மேஜைகளுக்கு அடியில் பதுங்கினர். எனினும் அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இந்த காட்சிகள் அனைத்தையும் அந்த நபர் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் நேரலையில் ஒளிபரப்பினார். அதனை தொடர்ந்து, தேவாலயத்தின் பாதுகாவலர்களில் ஒருவர் உடனடியாக தனது கைத்துப்பாக்கியை எடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுட்டு வீழ்த்தினார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

து படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் யார்? தாக்குதலின் பின்னணி என்ன? என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவாலயத்தின் பாதுகாப்பு குழுவில் தேவாலய உறுப்பினர்களும் தன்னார்வலர்களாக பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு முறையாக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர்தான் தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுட்டுக்கொன்றார்.

இந்த தாக்குதல் குறித்து டெக்சாசின் ஆளுநர் ரெக் போட் கூறுகையில் “வழிபாட்டு தலங்கள் புனிதமானவை. இங்கு வன்முறைகளுக்கு இடம் இல்லை. விரைவாக செயல்பட்டு துப்பாக்கி சூடு நடத்தியவரை வீழ்த்தி அதிக உயிர் இழப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவிய தேவாலய உறுப்பினர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என கூறினார்.


Next Story