சீனாவில் விமான என்ஜின் மீது நாணயங்களை வீசிய பயணி; ரூ.12 லட்சம் அபராதம்


சீனாவில் விமான என்ஜின் மீது நாணயங்களை வீசிய பயணி; ரூ.12 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 3 Jan 2020 11:00 PM GMT (Updated: 3 Jan 2020 7:25 PM GMT)

சீனாவில் விமான என்ஜின் மீது நாணயங்களை வீசிய பயணிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பீஜிங், 

சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள அன்கிங் தியான்சூஷன் நகரை சேர்ந்தவர் லூ சாவோ (வயது 28). இவர் விமானத்தில் முதல்முறையாக பயணம் செய்வதற்காக அன்கிங் தியான்சூஷன் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு அவர் ‘லக்கி ஏர்’ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் ஏறி அமர்ந்தார். விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் லூ சாவோ, திடீரென சீனாவின் 1 யுவான் நாணயங்களை எடுத்து விமானத்தின் என்ஜினுக்குள் வீசி எறிந்தார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து, விமானத்தை சோதனை செய்தபோது, லூ சாவோ நாணயங்களை வீசி எறிந்ததில் என்ஜின் சேதம் அடைந்தது தெரியவந்தது. எனவே பயணிகள் அனைவரும் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, விமான என்ஜினில் நாணயங்களை வீசிய லூ சாவோவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் போது, முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததால் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என கடவுளை வேண்டி நாணயங்களை என்ஜினில் வீசி எறிந்ததாக லூ சாவோ கூறினார்.

இதில் லூ சாவோ மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அவருக்கு 17 ஆயிரத்து 200 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம்) அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை ‘லக்கி ஏர்’ விமான நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என நீதிபதி கூறினார்.

Next Story