ஈரான் மீது போர் தொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் -நான்சி பெலோசி


ஈரான் மீது போர் தொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் -நான்சி பெலோசி
x
தினத்தந்தி 9 Jan 2020 12:06 PM GMT (Updated: 9 Jan 2020 12:06 PM GMT)

ஈரான் மீது போர் தொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் என்று அமெரிக்க சபாநாயகர் நான்சி கூறி உள்ளார்.

தெஹ்ரான்

சில தினங்களுக்கு முன் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க  படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

மேற்கு ஈராக்கில் உள்ள ஐன் அல்-ஆசாத் விமானத்தளத்திலும், ஈராக்கிய குர்திஸ்தானில் உள்ள எர்பில் தளத்திலும் ஈரான் 22 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்தது. ஆனால் இதனை அமெரிக்கா மறுத்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் நிலை வந்தால் போர் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் என்று சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். 

தற்போதைய சூழலில் பதற்றத்தை தணித்து, அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த திட்டமும் தம்மிடம் இல்லை என்று அதிபர் டிரம்ப் கூறியதை அடுத்து ஜனநாயக கட்சியினர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

சபாநாயகர் நான்சி பெலோசி கூறும்போது,

அமெரிக்க மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் ஒத்திசைவான திட்டம் தன்னிடம்  இல்லை என்று ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். எங்கள் கவலை ஜனாதிபதி போதுமான போர் அதிகாரங்கள் குறித்து  விவாதிக்கவில்லை.

1973 ஆம் ஆண்டு போர் அதிகாரச் சட்டத்தின் கீழ் நிர்வாகம், முக்கிய இராணுவ நடவடிக்கைகள் குறித்து சபைக்கு அறிவிக்க வேண்டும், ஆனால் டிரம்ப்  வழக்கத்திற்கு மாறாக, ஈராக்கில் இருந்தபோது சக்திவாய்ந்த ஈரானிய ஜெனரல் சுலைமானியை கொன்ற தாக்குதலை நியாயப்படுத்தி உள்ளார் என கூறினார்.

எம்.பி.க்களுடன் நடந்த சந்திப்பில் போர் குறித்த அச்சத்தை நீக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தவறி விட்டதாகவும் அக்கட்சி கூறி உள்ளது. 1973-ல் கொண்டுவரப்பட்ட போர் அதிகாரச் சட்டங்களின் படி, பெரிய யுத்த நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை.

பிரதிநிதிகள் சபையில் தோற்றாலும், செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால் ஒப்புதல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story