துருக்கியில் கோர விபத்து: படகு மூழ்கி, 11 அகதிகள் சாவு


துருக்கியில் கோர விபத்து: படகு மூழ்கி, 11 அகதிகள் சாவு
x
தினத்தந்தி 12 Jan 2020 11:05 PM GMT (Updated: 12 Jan 2020 11:05 PM GMT)

துருக்கியில் படகு மூழ்கிய கோர விபத்தில் சிக்கி 11 அகதிகள் உயிரிழந்தனர்.

அங்காரா,

உள்நாட்டுப்போர், அடக்குமுறைகளுக்கு பயந்து உயிர்பிழைப்பதற்காக சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்கள்.

இந்த அகதிகளில் பெரும்பாலோர் துருக்கி வழியாக செல்கின்றனர். இந்த நிலையில், ஐரோப்பாவுக்கும், துருக்கிக்கும் இடையே 2016-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், ஐரோப்பாவிடம் இருந்து கணிசமான நிதி உதவியை பெற்றுக்கொண்டு, அதற்கு கைமாறாக ஐரோப்பிய நாடுகளுக்கு தங்கள் நாட்டின் வழியாக செல்கிற அகதிகளை தடுத்து நிறுத்த துருக்கி உறுதி அளித்தது.

ஆனாலும் துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிற அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. அந்த வகையில், துருக்கியின் மேற்கு கடலோரப்பகுதியில் செஸ்மே நகருக்கு அருகே அகதிகள் படகு ஒன்று நேற்று முன்தினம் ஏஜியன் கடலில் மூழ்கியது.

இந்த கோர விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 11 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேரை துருக்கி கடலோர காவல் படை பத்திரமாக மீட்டது.

Next Story