இலங்கை பிரதமர் ராஜபக்சே அடுத்த மாதம் இந்தியா வருகை


இலங்கை பிரதமர் ராஜபக்சே அடுத்த மாதம் இந்தியா வருகை
x
தினத்தந்தி 12 Jan 2020 11:47 PM GMT (Updated: 12 Jan 2020 11:47 PM GMT)

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.

கொழும்பு,

இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று அதிபர் ஆனார். அவர் தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்தா ராஜபக்சேவை பிரதமர் ஆக்கினார்.

பிரதமர் பதவி ஏற்ற பிறகு முதல்முறையாக மகிந்தா ராஜபக்சே அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியா வருகிறார். இதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இலங்கை பிரதமர் அலுவலக வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ‘தி சண்டே மார்னிங்’ என்ற இலங்கை செய்தி இணையதளத்தில் இத்தகவல் வெளியாகி உள்ளது.

புதிய இலங்கை அரசுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதிலும், தமிழர் பகுதிகளின் வளர்ச்சிக்கு நிதிஉதவி அளிப்பதிலும் இந்தியா ஆர்வமாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின்போது, மகிந்தா ராஜபக்சே, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இருதரப்பு உறவுகள், தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிகிறது. தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டணி வற்புறுத்தி வரும் நிலையில், ராஜபக்சே இந்தியா வருகிறார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துள்ளார். கடந்த வாரம், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனே, இந்தியாவுக்கு வந்தார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பிறகு, புதிய இலங்கை அரசின் 3-வது உயர்மட்ட பயணமாக மகிந்தா ராஜபக்சேவின் பயணம் அமைகிறது.


Next Story