ஈரானில் வெடித்த போராட்டம் ; துப்பாக்கி சூடு ; அமெரிக்கா கண்டனம்


ஈரானில் வெடித்த போராட்டம் ; துப்பாக்கி சூடு ; அமெரிக்கா கண்டனம்
x
தினத்தந்தி 13 Jan 2020 4:15 AM GMT (Updated: 13 Jan 2020 7:42 AM GMT)

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்து உள்ளது. இதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெற்றது. ஈரான் அரசுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது.

தெஹ்ரான்

ஈரானின் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க படைகள் உள்ளன. அங்குள்ள பிஸ்மாயக், அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் உள்ளிட்ட சில இடங்களில் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ளன. இதில் அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது கடந்த 8-ந் தேதி ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தங்கள் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதற்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தியது.

அல்-ஆசாத் விமானப்படை தளத்தை 17 ஏவுகணைகளும், எர்பில் தளத்தை 5 ஏவுகணைகளும் தாக்கியதாக கூறிய ஈரான், இந்த தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தெரிவித்தது. அதை அமெரிக்கா மறுத்தது. இதனிடையே, ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உக்ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடா நாட்டவர் உள்பட 176 பயணிகள் உயிரிழந்தனர்.

ஈரான் ராணுவ தாக்குதலில் சொந்த நாட்டைச் சேர்ந்த 82 பேர் உயிரிழந்ததை அறிந்த அந்நாட்டு மக்கள், அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போராட்டங்களை அடக்க பாதுகாப்புத்துறையினரும்.. போலீசாரும் கடுமையாக போராடி வருகின்றனர்.இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஈரானுக்கான பிரிட்டன் தூதர் டோம்னிக் ராப் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். 

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி என்பதாலேயே பங்கேற்றதாகவும் அது போராட்டமாக மாறும் என தனக்குத் தெரியாது என்றும் துாதரக அதிகாரிகளை கைது செய்வது சட்டவிரோதம் என்றும் டுவிட்டரில் கூறியுள்ளார் ராப். இதனிடையே இங்கிலாந்து தூதரகத்தை மூடவேண்டும் எனக் கோரி, போராட்டம் வெடித்தது.

உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், போராட்ட களத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது உண்மை தான், ஈரானிய மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் ஆக்ரோசமாக குவாசிம் சுலைமானியின் போஸ்டர்களை உதைப்பதும், சுவற்றில் ஒட்டியிருந்த அவரின் போஸ்டரை கிழிப்பதும் போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஈரானில் நடைபெறும் போராட்டங்களை உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபடும் ஈரான் மக்களை அரசு கொல்லக்கூடாது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே போருக்கான முயற்சியை கைவிடுவதே அமெரிக்காவுடனான பதற்றத்தை குறைக்க உதவும் என கத்தார் அதிகாரிகளிடம் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கருத்து கூறியுள்ளார்.

Next Story