நிலவை சுற்றி பயணம் செய்ய காதலியை தேடும் ஜப்பானிய கோடீஸ்வரர்


நிலவை சுற்றி பயணம் செய்ய காதலியை தேடும் ஜப்பானிய கோடீஸ்வரர்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:48 AM GMT (Updated: 13 Jan 2020 10:48 AM GMT)

நிலவை சுற்றி பயணம் செய்ய காதலியை தேடிவருகிறார் முதல் முறையாக நிலவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜப்பானிய கோடீஸ்வரர்.

டோக்கியோ,

அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ எனும் தனியார் நிறுவனம் சுற்றுலாப் பயணிகளை சந்திரனுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக ’பிக் பால்கன்’ என்ற மிகப்பெரிய ராக்கெட்டை அந்நிறுவனம் தயாரிக்கிறது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2017-ல் இருந்தே, நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது. அவர்களின் கணக்குப்படி கடந்த  வருடம் மனிதர்களை அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் இன்று வரை மனிதர்களை அனுப்பவில்லை. ஆனால் தற்போது ''பிக் பால்கான் ஹெவி'' ராக்கெட் மூலம் மனிதர் ஒருவரை நிலவிற்கு அனுப்ப உள்ளதாக கூறியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா என்ற கோடீஸ்வரரை நிலவிற்கு அழைத்து செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. யுசாகு மேசாவா 2023-ம் ஆண்டு நிலவுக்கு செல்ல  உள்ளார்.

44 வயதான யுசாகு மேசாவா ஜப்பானை சேர்ந்தவர். ஜப்பானில் உள்ள மிகப்பெரிய 17 கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர். இந்தியாவில் உள்ள பிளிப்கார்ட் போன்ற ''சோசோடவுன்'' என்ற ஆன்லைன் ரீடெய்ல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஜப்பானில் இதுதான் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். அதேபோல் பல்வேறு பவுண்டேஷன், கலை பொருள் சேமிப்பு மையம் ஆகியவற்றை நடத்தி வருகிறார் யுசாகு மேசாவா.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, யுசாகு மேசாவா  தன்னை காதலிக்கும் பெண்ணுக்கு நிலவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:-

எனக்கு இப்போது 44 வயது ஆகிறது. தனிமை மற்றும் வெறுமை போன்ற உணர்வுகள் மெதுவாக என் மீது வரத் தொடங்கி உள்ளது. அப்போது, நான்  நினைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு பெண்ணை  காதலிக்க வேண்டும்.  நான் ஒரு ‘வாழ்க்கை துணையை’ கண்டுபிடிக்க விரும்புகிறேன். என்னுடைய எதிர்கால பங்குதாரருடன், விண்வெளியில் இருந்து எங்கள் அன்பையும் உலக அமைதியையும் காண விரும்புகிறேன் என கூறினார்.

யூசாகு மேசாவா இரண்டு காதலிகளை பிரிந்து தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு மூன்று குழந்தைகளும் உண்டு. பல பெண்களும் மேசாவாவின் மின்னஞ்சலுக்கு, தங்கள் புகைப்படங்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.

ஸ்பேஸ்எக்ஸ் திட்டத்தில் மேசாவாவுடன் சேர விரும்பும் பெண்கள் 20 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், “பிரகாசமான மற்றும் நேர்மறையான” ஆளுமை மற்றும் விண்வெளி பயணத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும் என்று வலைத்தளம் கூறுகிறது. விண்ணப்பங்களுக்கான காலக்கெடு ஜனவரி 17 ஆகும், மார்ச் மாத இறுதியில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

Next Story