அமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு


அமெரிக்கா-ஈரான் பதற்றம்: ஈரான் அதிபருடன் கத்தார் இளவரசர் சந்திப்பு
x
தினத்தந்தி 13 Jan 2020 3:41 PM GMT (Updated: 13 Jan 2020 3:41 PM GMT)

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில் ஈரான் அதிபர் ஹசன் ரெஹானியை கத்தார் இளவரசர் சந்தித்து பேசினார்.

டெஹ்ரான்.

பரம எரிகளாக இருந்து வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு வாரமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் ஈரான் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசி கொன்றது. இந்த செயலுக்கு தக்க பதிலடி தரும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் ஏவுகணைகள் வீசி தாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவானது. 

இதற்கிடையே உக்ரைன் நாட்டுக்கு சென்ற விமானத்தை ஈரான் தவறுதலாக ஏவுகணை வீசி தாக்கியதில் விமானத்தில் பயணித்த 176 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதில் உயிர் இழந்தவர்களில் பெரும்பாலானோர் ஈரான் மற்றும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சம்பவத்தால் உலக நாடுகளின் எதிர்ப்பையும் ஈரான் பெற்றது. ஈரானின் செயலுக்கு இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. 

குறிப்பாக விமானத்தை தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் மக்களே அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. சொந்த நாட்டு மக்களே ஈரானுக்கு எதிராக போராடி வருவது அந்நாட்டுக்கு மேலும் பின்னடைவை உருவாக்கி உள்ளது.

இத்தகைய பதற்றம் மிகுந்த சூழலில் ஈரான் அதிபர் ஹசன் ரெஹானியை கத்தார் இளவரசர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதற்றத்தை போக்குவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்காவுடன் நிலவும் மோதல் போக்கை கைவிட பேச்சுவார்த்தையே தீர்வு என்று கத்தார் இளவரசர் கூறினார்.

இதுகுறித்து கத்தார் இளவரசர் கூறுகையில், நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் என்னுடைய இந்த பயணம் அமைந்து இருக்கிறது. தற்போது ஈரானில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையே ஒரே தீர்வாக அமையும் என்றார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஈரானின் அதிகார தலைவர் அயத்துல்லா அலி காமேனியையும் கத்தார் இளவரசர் சந்தித்தார். 

இந்த சந்திப்பு குறித்து காமேனி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், 

ஊழல் நிறைந்த அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் இந்த பிராந்தியத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இதனை எதிர்கொள்வதற்கு ஒரே தீர்வு, பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும். பதற்றமான சூழலில் கத்தார் இளவரசரின் இந்தப்பயணம் அரிதான ஒன்றாகும் என்று பதிவிட்டு உள்ளார்.

அமெரிக்காவை எதிர்கொள்ள மத்திய கிழக்கு நாடுகள் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும் என்று காமேனி கூறி இருப்பது தற்போது நிலவும் பிரச்சினையை மேலும் வலுவடைய செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.    

Next Story