பொருளாதார தடை: “ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் கவலை இல்லை” - டிரம்ப் சொல்கிறார்


பொருளாதார தடை: “ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் கவலை இல்லை” - டிரம்ப் சொல்கிறார்
x
தினத்தந்தி 13 Jan 2020 11:30 PM GMT (Updated: 13 Jan 2020 9:46 PM GMT)

பொருளாதார தடை விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை என்று டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன்,

கடந்த 3-ந் தேதி, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க விமானத்தின் குண்டு வீச்சில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி பலியானார். இதற்கு பதிலடியாக, கடந்த 8-ந் தேதி, ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிய வந்தது.

இந்த தாக்குதல் நடந்த சற்று நேரத்தில் ஈரான் நாட்டில் உக்ரைன் நாட்டு விமானம் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 176 பேரும் பலியானார்கள். ஈரான் ஏவுகணை வீசி, விமானத்தை வீழ்த்தியதாக கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின.

முதலில் அதை மறுத்த ஈரான், தங்கள் படையினர் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஒப்புக்கொண்டது. இதையடுத்து, ஈரான் அரசுக்கு எதிராக ஈரானிலேயே போராட்டங்கள் வெடித்துள்ளன. உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்த காரணமானவர்கள் பதவி விலக வேண்டும் என்று ஈரான் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.

தலைநகர் டெஹ்ரானில், அமீர் கபீர், ஷெரீப் ஆகிய பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களை கொலை செய்வதை நிறுத்துமாறு ஈரான் அரசை அவர் எச்சரித்தார்.


இதற்கிடையே, பேச்சுவார்த்தை நடத்தும் சூழ்நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டு இருப்பதாக நேற்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்தார். ஈரான், கடுமையான நிர்பந்தத்தில் இருப்பதாகவும், இறுதியாக பேச்சுவார்த்தைக்கு அமரும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

அதை சுட்டிக்காட்டி, ஜனாதிபதி டிரம்ப் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அவர் கூறியிருப்பதாவது:-

பொருளாதார தடைகள் மற்றும் போராட்டங்களால் ஈரான் திணறுவதாகவும், அதனால், பேச்சுவார்த்தை நடத்த தள்ளப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார். ஆனால், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வருமா? என்று தெரியவில்லை, பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை. அதுபற்றி அந்த நாடுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது. போராட்டக் ாரர்களை கொல்லக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதே சமயத்தில், ஈரானின் போக்கில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க ஒப்புக்கொண்டுள்ளது. கத்தார் நாட்டு அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி, ஈரான் சென்றுள்ளார். ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியை சந்தித்து பேசினார்.

அப்போது, பதற்றத்தை தணிப்பதும், பேச்சுவார்த்தை நடத்துவதும்தான் இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.


Next Story