உலக செய்திகள்

அதிபர் புதின் பதவியில் நீடிக்க நடவடிக்கை: மெத்வடேவ் விலகல்; புதிய பிரதமர் நியமனம் + "||" + Measures to prolong Chancellor's post:Methvadev deviations; Appointment of new Prime Minister

அதிபர் புதின் பதவியில் நீடிக்க நடவடிக்கை: மெத்வடேவ் விலகல்; புதிய பிரதமர் நியமனம்

அதிபர் புதின் பதவியில் நீடிக்க நடவடிக்கை: மெத்வடேவ் விலகல்; புதிய பிரதமர் நியமனம்
ரஷியாவில் அதிபர் புதின் பதவியில் நீடிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளார். பிரதமர் மெத்வடேவ் பதவி விலகினார். புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

மாஸ்கோ, 

ரஷிய நாட்டின் அதிபராக விளாடிமிர் புதின் (வயது 67), 4–வது முறையாக பதவி வகித்து வருகிறார். இவரது இந்த பதவிக்காலம் 2024–ம் ஆண்டு முடிய உள்ளது.

அந்த நாட்டின் பிரதமராக டிமிட்ரி மெத்வடேவ் இருந்து வந்தார்.

இந்த நிலையில் விளாடிமிர் புதின், அந்த நாட்டின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் நேற்று முன்தினம் வருடாந்திர உரை ஆற்றினார். அப்போது அவர் அரசியல் சாசன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இது அவர் பதவியில் நீடிப்பதற்கு வழிவகுக்கும். இது தொடர்பாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த வாக்கெடுப்பில் புதின் முடிவுக்கு மக்கள் ஆதரவு அளிக்கிறபட்சத்தில், சீன அதிபர் ஜின்பிங்கைப் போலவே புதினும் வாழ்நாளெல்லாம் பதவியில் நீடிக்க வழி பிறக்கும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அதிபரின் அதிகாரங்கள், நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்கு மாற்றப்படும்.

தற்போது பிரதமரை நியமிக்கும் அதிகாரம் அதிபர்வசம் உள்ளது. இந்த நியமனத்துக்கு நாடாளுமன்ற கீழ்சபை ஒப்புதல் மட்டுமே அளிக்கும். எதிர்காலத்தில் புதிய பிரதமரை நாடாளுமன்ற கீழ்சபையே தேர்வு செய்யும்.

புதினின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரதமர் டிமிட்ரி மெத்வடேவ் உடனடியாக பதவியை ராஜினாமா செய்தார். அதிபர் புதின் புதிய மாற்றங்களை செய்வதற்கு வசதியாக தனது அரசு பதவி விலகுவதாக அவர் அறிவித்தார்.

இதையொட்டி அவர் புதினுடன் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். மெத்வடேவ் அரசு பதவி விலகும் முடிவு தங்களுக்கு தெரியாது என மந்திரிகள் கூறி உள்ளனர்.

மெத்வடேவின் பணிகளுக்கு புதின் நன்றி தெரிவித்துக்கொண்டார். மெத்வடேவ், தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் துணைத்தலைவர் பதவியை ஏற்குமாறு புதின் கூறி உள்ளார். இதன் தலைவர் பதவி புதின்வசம் தொடரும்.

மெத்வடேவ் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக மத்திய வரித்துறையின் தலைவர் மிக்கேல் மிசுஸ்டினை புதின் நியமனம் செய்தார். இதற்கு ரஷிய ஆளும் கட்சி ஐக்கிய ரஷியா தனது ஒப்புதலை அளித்தது.

ரஷியாவில் அடுத்தடுத்து நடந்துள்ள அரசியல் மாற்றங்கள், உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.