கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான் -அமெரிக்கா குற்றச்சாட்டு


கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்  -அமெரிக்கா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Jan 2020 6:11 AM GMT (Updated: 18 Jan 2020 8:30 AM GMT)

பாகிஸ்தான் கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.

வாஷிங்டன்,

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு பொறுப்பேற்ற பிறகு, பாகிஸ்தானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை கொள்கைகளை தீர்மானிப்பதில், தன்னுடைய பிடியை அந்நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு அளிப்பதோடு, அண்டை நாடுகளை குறிவைக்கும் தீவிரவாத இயக்கங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தீவிரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவுவதற்கு உதவும் வகையில், இந்திய படைகளின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கோடு, எல்லைக்கு அப்பாலிருந்து இந்திய நிலைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்கும் வேலையையும் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்கிறது.

பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் குவித்து வருவதோடு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை குறிவைத்து வருகிறது.

இந்தியாவில் 130 முதல் 140 அணுஆயுதங்கள் உள்ள நிலையில், பாகிஸ்தானிடம் 140 முதல் 150 அணு ஆயுதங்கள் வரை உள்ளது என்றும், 2025-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 250 வரை அதிகரிக்கும் என்றும் சர்வதேச மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.

சீனா மற்றும் வடகொரியாவின் உதவியோடு பாகிஸ்தான் அணுஆயுதங்களை பெருக்கியுள்ளது என்று சர்வதேச மதிப்பீடுகள்  சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கள்ளச்சந்தை மூலமாக அணு ஆயுதத்தை குவிப்பதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. 

அமெரிக்க நீதிமன்றத்தில் நேற்று மூடி முத்திரையிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட  அறிக்கை  ஒன்று நீதிபதி முன்னிலையில் பிரிக்கப்பட்டது. அதில் 5 பிரபல குற்றவாளிகள் குறித்த குறிப்புகள் இருந்தன.

அமெரிக்காவில் தயாராகும் பொருட்களை அந்த 5 பேரும் கடத்திச் சென்று இரண்டு பாகிஸ்தான் அரசு ஏஜென்சிகளுக்கு பெரும்தொகைக்கு விற்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஏஜென்சிகளும் பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டத்தில் தொடர்பு உடையவை.

பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தை ஆதரிப்பதற்காக விமானப் பாகங்கள் மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற  போக்குவரத்துப் பொருட்களுக்கு ஐந்தாண்டு காலப்பகுதியில் சர்வதேச கொள்முதல் வலையமைப்பை இயக்க உதவி உள்ளனர்.

வடக்கு பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியை இருப்பிடமாக கொண்ட பிசினஸ் வேர்ல்ட் என்ற முன்னணி நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில்  முஹம்மது அஹ்சன் வாலி(48), மற்றும் ஹாஜி வாலி முஹம்மது ஷேக் (82) தந்தை மற்றும் மகன் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூன்று பேரில் பாகிஸ்தானில் உள்ள ஷேக்கின் மகன்களில் ஒருவர், ஹாங்காங்கை சேர்ந்த ஒருவரும், இங்கிலாந்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

பாகிஸ்தானின் ஆயுதப் படைகளுக்கும், பாகிஸ்தான் அணு ஆயுதங்களை  வழங்கும் மேம்பட்ட பொறியியல் ஆராய்ச்சி அமைப்புக்காக  (ஏரோ) அமெரிக்காவிலிருந்து பொருட்களை வாங்குவதாக குற்றம் சாட்டப்பட்டவர் 2014 செப்டம்பர் முதல் 2019 அக்டோபர் வரை பணியாற்றியதாக நீதித்துறை தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கருப்புச் சந்தை மூலம் அணு ஆயுதத்தை பெருக்கி  வருவதாக அமெரிக்க நீதித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கான துணை அட்டர்னி ஜெனரல் ஜான் சி டெமர்ஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story