நியூயார்க் நகரை புயலில் இருந்து காக்க சுவர் எழுப்புவது முட்டாள்தனம்; அமெரிக்க அதிபர் டிரம்ப்


நியூயார்க் நகரை புயலில் இருந்து காக்க சுவர் எழுப்புவது முட்டாள்தனம்; அமெரிக்க அதிபர் டிரம்ப்
x
தினத்தந்தி 19 Jan 2020 5:05 AM GMT (Updated: 19 Jan 2020 5:05 AM GMT)

அமெரிக்காவில் நியூயார்க் நகரை புயலில் இருந்து காக்க சுவர் எழுப்புவது முட்டாள்தனமானது என அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சமீப காலங்களில் அடிக்கடி புயல் தாக்குதல்கள் ஏற்பட்டு வருகின்றன.  இந்நிலையில் அந்நகரை காப்பதற்காக, அமெரிக்க ராணுவம் ஆனது கடற்கரையில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள நியூயார்க் துறைமுகம் பகுதியில் பெரிய சுவர் ஒன்றை எழுப்ப முடிவு செய்துள்ளது.  இதற்கான திட்டமும் வகுக்கப்பட்டு உள்ளது.  இந்த திட்ட செயல்பாட்டிற்கு 11,900 கோடி அமெரிக்க டாலர் தேவைப்படும்.  இத்திட்டம் நிறைவடைய 25 ஆண்டுகள் ஆகும்.

இதுபற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், புயல் தாக்குதல்களில் இருந்து நியூயார்க் நகரை காப்பதற்காக அதனை சுற்றி 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் பெரிய அளவிலான சுவரை எழுப்புவது என்பது அதிக பொருட்செலவு ஏற்படுத்தும்.  அது முட்டாள்தனமானது.  இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு எதிரானது.  தேவையானபொழுது இந்த திட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது.  இது காண்பதற்கு பயங்கர தோற்றமளிக்கும் என தெரிவித்து உள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்பொழுது, மெக்சிகோ நாட்டில் இருந்து சட்டவிரோத வகையிலான அகதிகள் குடியேற்றத்தினை தடுத்து நிறுத்துவதற்காக மெக்சிகோ எல்லையை ஒட்டிய பகுதியில் மிக பெரிய சுவர் எழுப்பப்படும் என டிரம்ப் உறுதி கூறினார்.

எனினும், இந்த திட்டம் கடந்த 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நிதிநிலையில் நெருக்கடி ஏற்படுத்தியது.  இதன் தொடர்ச்சியாக சுவர் எழுப்புவதற்கு போதிய பணம் டிரம்புக்கு கிடைக்கப்பெறவில்லை.  இதனால் 550 மைல்கள் நீளம் கொண்ட முழு சுவரும் 2020 தேர்தலின்பொழுது கட்டப்படும் என டிரம்ப் உறுதியளித்து உள்ளார்.

Next Story