இந்தோனேசியாவில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்து 7 பேர் சாவு


இந்தோனேசியாவில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்து 7 பேர் சாவு
x
தினத்தந்தி 20 Jan 2020 5:32 AM GMT (Updated: 20 Jan 2020 10:05 PM GMT)

இந்தோனேசியாவில் பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றில் மூழ்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.

ஜகார்தா,

இந்தோனேசிய தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இந்த மாதத்தில் மட்டும் அங்கு 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் அங்குள்ள சுமத்ரா தீவில் கவுர் நகரில் ஆற்றின் நடுவே புதிதாக பாலம் கட்டப்பட்டு இருந்தது. அந்த பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் மீது 30-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சரிந்து விழுந்த பாலத்தோடு சேர்ந்து, அதில் நின்றவர்களும் திபுதிபுவென ஆற்றுக்குள் விழுந்தனர். ஏற்கனவே பெய்து வரும் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. இதனால் அதில் விழுந்தவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் பலர் மீட்கப்பட்ட நிலையில், 7 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் மாயமான 3 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசி மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 95 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவாகியது. இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிகை எதுவும் விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவலும் இல்லை.

Next Story