176 பேர் பலியான உக்ரைன் விமான விபத்து: கருப்பு பெட்டியை ஒப்படைக்க கனடா வலியுறுத்தல்


176 பேர் பலியான உக்ரைன் விமான விபத்து: கருப்பு பெட்டியை ஒப்படைக்க கனடா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Jan 2020 11:52 AM GMT (Updated: 20 Jan 2020 11:52 AM GMT)

176 பேரை பலி கொண்ட உக்ரைன் விமான விபத்து தொடர்பான கருப்பு பெட்டியை உக்ரைன் அல்லது பிரான்சிடம் ஒப்படைக்க கோரி கனடா அரசு ஈரானை வலியுறுத்தியுள்ளது.

டொரண்டொ,

கடந்த 8 ஆம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் ஈரான் ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த கனடா நாட்டு மக்கள் 57 பேர் உள்பட மொத்தம் 176 பேர் உயிரிழந்தனர். 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதலில் அறிவித்த ஈரான், பின்னர் பதற்றம் நிறைந்த ராணுவ பகுதிக்கு அருகே பறந்த பயணிகள் விமானத்தை, எதிரி நாட்டின் போர் விமானம் என நினைத்து ஏவுகணையை வீசி தாக்கிவிட்டதாக கூறியது. இது மனித தவறால் நடைபெற்ற விபத்து என்றும், இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ஈரான் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, இந்த விமான விபத்து குறித்த உண்மை நிலை ஆராயப்பட வேண்டும் என்று கனடா அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்வதற்கான ஆய்வகங்கள் பிரான்ஸ் நாட்டில் இருப்பதால், சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கருப்பு பெட்டியை பிரான்சிடம் ஈரான் அரசு ஒப்படைக்க வேண்டும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வலியுறுத்தினார்.

இந்நிலையில் கனடா வெளியுறவுதுறை அமைச்சர்  பிரான்கோய்ஸ் பிலிப், ஈரான் வெளியுறவுதுறை அமைச்சர் முகமது சாரிஃப் உடனான தனது அதிகாரப்பூர்வ சந்திப்பின் போது இது குறித்து பேசினார்.

"விமானத்தின் கறுப்புப் பெட்டியை உக்ரைன் அல்லது பிரான்சுக்கு விரைவாக அனுப்ப வேண்டும் என்றும், அங்கு இது குறித்த ஆய்வுகள்  வெளிப்படையான முறையில் செய்யப்படலாம்" என்று பிரான்கோய்ஸ் பிலிப் கூறியுள்ளார்.

Next Story