கேரளாவை சேர்ந்த 8 பேர் பரிதாப சாவு: உல்லாச விடுதியில் தங்கி இருந்தபோது நடந்தது என்ன?


கேரளாவை சேர்ந்த 8 பேர் பரிதாப சாவு: உல்லாச விடுதியில் தங்கி இருந்தபோது நடந்தது என்ன?
x
தினத்தந்தி 21 Jan 2020 9:16 AM GMT (Updated: 21 Jan 2020 8:39 PM GMT)

நேபாளத்தில் ஓட்டல் அறையில் கேரளாவை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.

காத்மாண்டு,

கேரளாவை சேர்ந்தவர்கள் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தனர். உல்லாச விடுதியில் அறை எடுத்து தங்கியபோது, 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் இறப்பின் பின்னணி குறித்த உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.

கேரளாவை சேர்ந்த 17 பேர் நேபாள நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

அங்கு அவர்கள் கடல் மட்டத்தில் இருந்து 2,500 மீட்டர் உயரத்தில் உள்ள டாமன் என்ற புகழ் பெற்ற சுற்றுலா தலத்தில், எவரெஸ்ட் பனோரமா ரிசார்ட் என்ற உல்லாச விடுதியில் நேற்று அறை எடுத்து தங்கினர்.

ஒரே அறையில் 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் தங்கினர். அவர்கள் கடும் குளிர் என்பதால் குளிர்காய்வதற்காக கியாஸ் ஹீட்டரை இயக்கியதாக தெரிகிறது. இதில் கியாஸ் கசிவு ஏற்பட்டதில் அவர்கள் அனைவரும் மயங்கி சரிந்தனர்.

இதைக்கண்டு விடுதி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, 8 பேரும் ஹெலிகாப்டர் மூலம் அங்குள்ள ஹாம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.

இறந்த 8 பேரில் 2 தம்பதியரும், அவர்களது 4 குழந்தைகளும் அடங்குவர்.

அவர்கள் விவரம் வருமாறு:-

பிரவீண் கிருஷ்ணன் நாயர் (வயது 39), மனைவி சரண்யா சசி (34), இந்த தம்பதியரின் மகள்கள் ஸ்ரீபத்ரா (9), ஆர்சா, மகன் அபினவ்.

மற்றொரு தம்பதியர் ரஞ்சித் குமார் (39), இந்து லட்சுமி பீதாம்பரன் (34) மற்றும் இவர்களின் மகன் வைஷ்ணவ் ரஞ்சித் (2).

ரஞ்சித்குமார், இந்து லட்சுமி பீதாம்பரன் தம்பதியரின் மற்றொரு மகன் மாதவ் காயமின்றி தப்பினார்.

சுற்றுலா சென்றிருந்த 17 உறுப்பினர்கள் குழுவில் 4 பேர் பாப்பனம்கோடு ஸ்ரீசித்திரை திருநாள் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் முன்னாள் மாணவர்கள் ஆவர்.

சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த துயர முடிவு குறித்து தகவல் அறிந்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.

உடனடியாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு அவர் ஒரு அவசர கடிதம் எழுதினார். அதில் அவர் பலியானவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், அவர்களது குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story