உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு + "||" + For coronavirus attacks The number of victims rises to 26

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க சில நகரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பெய்ஜிங்,

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காய்ச்சலுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர்.


அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவுக்கும் வைரஸ் தொற்றியது. மனிதர்கள் மூலமாக எளிதில் பரவும் இந்த வைரஸ் சீனாவின் பல்வேறு நகரங்களுக்கும் பரவத் தொடங்கியது.

வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் வைரஸ் பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 26 பேர் பலியாகி உள்ளனர். சீனா முழுவதும் 880 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பாதிக்கும் அதிகமானோர் 80 வயதை தாண்டியவர்கள் என சீன அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தின் செல்களை தாக்குகிறது. ஜலதோஷம், தும்மல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஆகியவைதான் வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி. தொடர்ந்து நுரையீரலை தாக்கும் வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கிறது. நுரையீரல் உள்பட சுவாச மண்டலத்தின் செல்களிலும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சுவாசிக்க முடியாமல் மரணம் நிகழ்கிறது.

இந்த வைரஸ் பாதிப்புக்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் விரைவாக இறக்க நேரிடுகிறது. இதற்கிடையே நோயினால் பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் தேறிவருவதாகவும் சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு சீனாவில் கடல் உணவு வர்த்தக மையத்திலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. பாம்புகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்பதற்கு அதிகமான சான்றுகள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தும்மல், தொடுதல் மற்றும் கைகளை குலுக்குவதன் மூலமாகவே இந்த வைரஸ் பரவுகிறது.

வைரசிலிருந்து தற்காத்துக்கொள்ள சுவாச முகமூடிகளை அணியுமாறும், வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சீன புத்தாண்டு தின கொண்டாட்டத்துக்காக கோடிக்கணக்கான மக்கள் நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள்.

இதனால் வைரஸ் பரவுவது அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாக அரசு போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது. ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 நகரங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ரெயில், பஸ், விமான போக்குவரத்து முற்றிலுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 4 கோடி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்கள், உணவுப்பொருட்கள் எப்படி கிடைக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர். உணவுப்பொருட்களின் பற்றாக்குறை ஆபத்தும் அங்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் சூப்பர் மார்க்கெட்களில் குவிந்து பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் விலைவாசியும் உயர்ந்து உள்ளது.

மக்கள் அதிகமான எண்ணிக்கையில் ஆஸ்பத்திரிகளுக்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள். உடனடியாக ஆயிரம் படுக்கை வசதி கொண்ட ஒரு ஆஸ்பத்திரியை கட்டுவதில் அரசு தீவிரம் காட்டுகிறது. டாக்டர்கள், செவிலியர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்கள்.

சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அமெரிக்கா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளும் அச்சத்திற்குள்ளாகி உள்ளன.

கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதால் மருத்துவ அவசரநிலையை அறிவிப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் பரிசீலித்து வருகிறது. பன்றிக் காய்ச்சல், எபோலா வைரஸ் பரவிய காலங்களில் மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையே கொரோனா வைரசின் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் புகைப்படத்தை சீனாவின் தேசிய நுண்ணறிவியல் மையம் வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவின் கோர தாண்டவம் : ஒரே நாளில் 242 பேர் பலி
உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 242 பேர் பலியாகி உள்ளனர்.
2. கொரோனா வைரஸ் தாக்குதல் ; சீனாவில் பலி எண்ணிக்கை 560 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளது.
3. கொரோனா வைரஸ் தாக்குதல்: சோம்பி நகரம் போல் மாறி விட்ட சீனாவின் யுவான் நகரம்?
கொரோனா வைரஸ் தாக்குதல்: யுவான் நகரம் முழுவதும் மக்கள் தெருக்களிலும் மருத்துவமனையிலும் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி சோம்பி நகரமாக காட்டுகின்றன.