துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 14 பேர் பலி


துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 14 பேர் பலி
x
தினத்தந்தி 25 Jan 2020 1:18 AM GMT (Updated: 25 Jan 2020 1:18 AM GMT)

துருக்கி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 14 பேர் பலியாகி உள்ளனர்.

துருக்கி நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலநடுக்கம் 10 கி.மீட்டர்கள் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  முதலில் 4 பேர் பலி என தகவல் வெளியானது.  இதன்பின் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டின் கிழக்கே எலாஜிக் மாகாணத்தின் சிவ்ரைஸ் நகரில் சிறிய ஏரிப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  மேஜை உள்ளிட்ட பொருட்கள் மக்கள் மீது விழுந்துள்ளன.  இதனால் குடியிருப்புவாசிகள் அலறி அடித்து கொண்டு தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.  இந்த நிலநடுக்கத்திற்கு அந்த பகுதியில் 8 பேர் வரை பலியாகி உள்ளனர்.

இதனை தொடர்ந்து மீட்பு படையினர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு சென்றுள்ளனர்.  இதேபோன்று நாட்டின் தென்மேற்கே மலத்தியா மாகாணத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலநடுக்கத்திற்கு பின் 60 முறை அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன.  இதனை அடுத்து அந்த பகுதிக்கு 400க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 1999ம் ஆண்டு துருக்கியின் மேற்கே இஸ்மித் நகரில் ஏற்பட்ட, ரிக்டரில் 7.4 அளவிலான கடுமையான நிலநடுக்கத்திற்கு 17 ஆயிரம் பேர் பலியாகினர்.

Next Story