2 பேர் குளித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் பயணம்: வீடியோ ‘வைரல்’ ஆனதால் பிடித்து அபராதம்


2 பேர் குளித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் பயணம்: வீடியோ ‘வைரல்’ ஆனதால் பிடித்து அபராதம்
x
தினத்தந்தி 25 Jan 2020 9:04 PM GMT (Updated: 25 Jan 2020 9:04 PM GMT)

2 பேர் குளித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த வீடியோ ‘வைரல்’ ஆனதால், அவர்களை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது.

ஹனோய்,

வியட்நாம் நாட்டில் நடந்த வேடிக்கை சம்பவம் இது. அங்கு பின் டுவாங் மாகாணத்தில் ஹூய்ன்தன் கான் (வயது 23) என்ற வாலிபரும், இன்னொருவரும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். அவர்கள் இருவரும் மேலாடை அணிந்திருக்க வில்லை. மோட்டார் சைக்கிளில் அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு வாளியில் தண்ணீரை வைத்துக்கொண்டனர்.

பின்னால் இருந்த நபர், வாளியில் இருந்து தண்ணீரை தன் மீது ஊற்றிக்கொண்டும், மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் மீது ஊற்றிக்கொண்டும் சென்றார். அவர்கள் தங்களுக்கு தாங்களே சோப்பும் போட்டுக்கொண்டனர். இப்படி அவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவாறே குளித்துக்கொண்டு போனதை பார்த்த பலரும் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது மின்னல் வேகத்தில் ‘வைரல்’ ஆனது. மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவாறு அவர்கள் குளித்துக்கொண்டு போனது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது.

குளியல் வீடியோவை பார்த்த போலீசார், அதன் அடிப்படையிலும், மோட்டார் சைக்கிள் எண் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை வைத்தும் துப்பு துலக்கினர். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ஹூய்ன்தன் கான் போலீசார்வசம் சிக்கினார். போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டதற்காக அவருக்கும், அவருக்கு பின்னால் அமர்ந்து சென்றவருக்கும் தலா 80 டாலர் (சுமார் ரூ.5,600) அபராதம் விதித்தனர்.

ஓட்டுனர் உரிமம் பெற்றிராத ஹூய்ன்தன் கானுக்கு, மோட்டார் சைக்கிளை வாடகைக்கு கொடுத்த நபருக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.


Next Story