துருக்கியில் பயங்கர நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு


துருக்கியில் பயங்கர நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
x
தினத்தந்தி 26 Jan 2020 1:39 PM GMT (Updated: 26 Jan 2020 1:39 PM GMT)

துருக்கியில் நில நடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

இலாஜிக்,

துருக்கி நாடு, புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால், அவ்வப்போது நில நடுக்கம் ஏற்பட்டு பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் அங்குள்ள இலாஜிக் மாகாணத்தில் சிவ்ரிஸ் என்ற சிறிய நகரத்தை மையமாக வைத்து நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 8.55 மணிக்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது.

இந்த நில நடுக்கத்தால் தியார் பக்கிர், சான்லியர்பா, அடியமான் உள்ளிட்ட பல நகரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின.

வீடுகளிலும், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களிலும் இருந்து பொதுமக்கள் பதறியடித்துக்கொண்டு, வெளியே ஓடி வந்து வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நில நடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 22 பேர் பலியானதாகவும், 1,015 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. 

இந்நிலையில், நில நடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 

நில நடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மீட்பு, தேடல் குழுக்கள் விரைந்து சென்று மீட்பு பனிகளில் ஈடுபட்டு வருகின்றன.

Next Story